கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கமா? - நீதிமன்றம் புதிய தகவல்

பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே, பயணிகளுக்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தி தரப்படவில்லை எனவும், இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

Jul 9, 2024 - 14:52
Jul 9, 2024 - 15:33
 0
கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கமா? - நீதிமன்றம் புதிய தகவல்
Madras High Court on Koyambedu Bus Stand

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் அமைக்கும் வரை அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.  

சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி துவங்கப்பட்டது. பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவு பேருந்து, தனியார் ஆம்னி பேருந்துகள் என அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே, பயணிகளுக்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தி தரப்படவில்லை எனவும், இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்களை அழைத்துச் செல்வதில் பெருத்த சிரமம் ஏற்பட்டது.

அதேபோல், தென் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு வர விரும்பும் பயணிகள் நேராக கோயம்பேடு வர முடியாது. மாறாக கிளாம்பாக்கம் வந்த பின்னர், அங்கிருந்து மாநகர பேருந்தின் மூலம்தான் கோயம்பேடு வரமுடியும் என்பதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனையடுத்து, பேருந்து நிலையம் அமைக்கும் போது, பயணிகள் சுலபமாக அணுக ஏதுவாக விமான நிலையம் - கிளாம்பாக்கம், வேளச்சேரி - தாம்பரம் மெட்ரோ ரயில் இணைப்பு ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் துவங்கும் வரை, கோயம்பேட்டில் இருந்து முன்பு போல அரசு மற்றும் ஆம்னி பஸ்களை இயக்க உத்தரவிடக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அந்த மனுவில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு,  விமான நிலையம் - கிளாம்பாக்கம், வேளச்சேரி - தாம்பரம் மெட்ரோ ரயில் சேவை துவங்கும் வரையும், புதியதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வான்வெளி நடை பாதை மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பெருங்களத்தூர் மார்க்கம் செல்லும் வாகனங்களுக்கு யு வளைவு பாலம் அமைக்கும் வரையில், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கவும், இலகு மற்றும் கனரக வணிக வாகனங்களை சென்னை அவுட்டர் ரிங் ரோடு வழியாக இயக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த வழக்குகள் தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தனி நீதிபதி முன் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை வாபஸ் பெற்று, தனி நீதிபதி முன் வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow