மகராஷ்டிரா தேர்தல்: மோடி, அமித்ஷா, அதானி கூட்டணி வெற்றி.. சிவசேனா எம்.பி சாடல்
மகராஷ்டிரா தேர்தலில் நரேந்திர மோடி, அமித்ஷா, அதானி இடையேயான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், மகராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியும் மோதின.
மும்பையின் வொர்லி சட்டமன்றத் தொகுதியில் சிவசேனா (உத்தவ்) கட்சி சார்பாகவும், சிவசேனா (ஷிண்டே) தரப்பில் மிலிந்த் தியோராவும், மகராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) சார்பில் சந்தீப் தேஷ்பாண்டேவும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில், தற்போதைய நிலவரப்படி பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 220 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறன. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் 56 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 12 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்த முன்னிலை நிலவரத்தால் உற்சாகமடைந்த பாஜக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மகராஷ்டிரா தேர்தல் குறித்து சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறுகையில், இத்தேர்தல் முடிவுகள் மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக இல்லை. இதுமக்களின் வெற்றி இல்லை. தேர்தலில் மிகப்பெரிய சதி நடந்துள்ளது. நரேந்திர மோடி, அமித்ஷா, அதானி இடையேயான கூட்டணி தான் வெற்றிப்பெற்றுள்ளது. அதானி தொடர்பான சர்ச்சையில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சட்டசபை தேர்தல் முடிவுகள் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக சார்பில் பணம் வாரி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது உள்ள எம்.எல்.ஏக்களில் யாராவது ஒருவர் தோற்றாலும் என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்தது என்ன மாதிரியான நம்பிக்கை? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் ராவத், வாக்கு சீட்டு மூலம் மீண்டும் தேர்தலை நடத்த வலியுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?