ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி... புதினுடன் சந்திப்பு... என்னென்ன விஷயங்கள் பேசப்படுகிறது?
ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது. ரஷ்யாவின் மிக முக்கியமான கூட்டாளி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதால், மோடி-புதின் சந்திப்பை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.

டெல்லி: இந்தியாவில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். மோடி பிரதமராக பதவியேற்றவுடன் முதல் வெளிநாட்டு பயணமாக அண்மையில் இத்தாலி சென்று ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று ரஷ்யா புறப்பட்டு சென்றார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ செல்லும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றபின்பு மேற்கொள்ளும் 2வது வெளிநாட்டு பயணம் இதுவாகும். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி, சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா செல்கிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ செல்லும் பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரவேற்க உள்ளார். தொடர்ந்து புதின் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்க உள்ளார். பின்பு இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக ரஷ்யா செல்ல உள்ளதால், மோடி-விளாடிமிர் புதின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது. ரஷ்யாவின் மிக முக்கியமான கூட்டாளி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதால், மோடி-புதின் சந்திப்பை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளன.
மோடி-புதின் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உள்நாட்டு பிரச்சனைகள், உலகலாவிய பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஏஏன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமார், '' இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எரிசக்தி துறையில் இந்தியாவுக்கு மிக முக்கிய ஆதாரமாக ரஷ்யா விளங்கி வருகிறது. ஆகவே முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்களை முன்னெடுத்துச் செல்ல இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது'' என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவுக்கு சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்திய பிரதமர் ஒருவர் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரியா செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






