கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள்... ஒருவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு!

திருநெல்வேலியில் உள்ள கல்லூரி ஒன்றில், பேராசிரியர்கள் இருவர் மாணவியை மது அருந்த அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sep 14, 2024 - 16:46
 0
கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள்... ஒருவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு!
கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பிரபல கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெபஸ்டின் (வயது 40), தூத்துக்குடியை சேர்ந்த பால்ராஜ் (40) ஆகியோர் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில் பேராசிரியர் ஜெபஸ்டின் தற்போது தூத்துக்குடி சிப்காட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவருமே கல்லூரியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, கடந்த 4ம் தேதி இரவில் பேராசிரியர்கள் இருவரும் நெல்லை மாநகர பகுதியில் உள்ள ஒரு விடுதியில் மது குடித்துள்ளனர். ஒருகட்டத்தில் மது போதை அதிகமாகவே, நள்ளிரவு நேரத்தில் தனது துறையில் படிக்கும் மாணவிக்கு போன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பேராசிரியர் பால்ராஜ் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். அப்போது மற்றொரு பேராசிரியரான ஜெபஸ்டின் செல்போனை பிடுங்கி அந்த மாணவியை மது குடிக்க வா என அழைத்துள்ளதாகத் தெரிகிறது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியதோடு, பாளையங்கோட்டை காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். அதேநேரம் இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்தால், மகளின் படிப்பு பாதிக்கப்பட்டும் என பெற்றோர்கள் அஞ்சியதாகவும் கூறப்படுகிறது. எனவே மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என்று மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் அந்த புகார் மனுவை போலீசார் கிடப்பில் போட்டுவிட்டனர். ஆனால் மாணவியின் பெற்றோர் கூறியதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், இதுகுறித்து அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை கைது செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாக தெரிவித்தனர். மேலும் இந்தச் சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவர, உளவுத்துறை மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஸ் குமார் மீனா, இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்து விசாரணை நடத்தினார். அதில் பேராசிரியர்களான ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகிய 2 பேரும் மாணவிக்கு போன் செய்து ஆபாசமாக பேசியது உறுதியானது. 

இதையடுத்து தூத்துக்குடி விரைந்த தனிப்படை போலீசார் பேராசிரியர் ஜெபஸ்டினை கைது செய்தனர். அதேநேரம் மற்றொரு பேராசிரியர் பால்ராஜ் தலைமறைவானார். அவரை தனிப்படையினர் வலைவீசி தேடிவரும் நிலையில், இருவரையும் கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. கல்லூரி மாணவியை பேராசிரியர்களே மது அருந்த அழைத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow