MohanG: பழனி பஞ்சாமிர்தம் சர்ச்சை... மன்னிப்பு கேட்கணும்... மோகன் ஜி-க்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின்
பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சையாக பேசிய இயக்குநர் மோகன் ஜி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதனைத் தொடர்ந்து திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி, சமீபத்தில் பழனி கோயிலின் பஞ்சாமிர்தம் குறித்து பேசியிருந்தார். அதாவது பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக கூறியிருந்தார். மோகன் ஜி பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. திருப்பதி லட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில், மோகன் ஜி பழனி பஞ்சாமிர்தம் குறித்து பேசியதும் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனையடுத்து போலீஸாரால் கைது செய்யப்பட்ட மோகன் ஜி, திருச்சி 3-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னர் நீதிமன்றமே அவரை சொந்த ஜாமினில் விடுதலை செய்தது. இந்த வழக்குத் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் இயக்குநர் மோகன் ஜி-க்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை. அதன்படி, தமிழகம் முழுவதும் வெளியாகும் பிரபல தமிழ், ஆங்கில நாளிதழ்களில் மன்னிப்பு கேட்பதாக விளம்பரம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், உண்மையிலேயே பழனி கோயில் மீது அக்கறை இருந்தால், மனுதாரரான மோகன் ஜி பழனி கோயிலுக்குச் சென்று தூய்மைப் பணி மேற்கொள்ளலாம் அல்லது பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல், பழனி பஞ்சாமிர்தம் குறித்து கருத்துத் தெரிவித்த சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன் உறுதிப்படுத்தாமல் எந்த தகவலையும் கூறக் கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக திருப்பதியில் நடந்த விஷயத்தை அங்கு உள்ள முதலமைச்சரே கூறினார். அதேபோல் தான் எனக்கு கிடைத்த செவி வழி செய்தி பற்றி உண்மையாக இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் நடவடிக்கை வேண்டும் என்ற அடிப்படையில் கூறியதாக மோகன் ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில், மோகன் ஜி விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு நெட்டிசன்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்து வருகிறது.
What's Your Reaction?






