பல்கலைக்கழக கிளைகள் அமைக்கும் திட்டம்.. லண்டன் டைம்ஸ் உயர்கல்வி அமைப்புடன் ஒப்பந்தம்..!
அறிவுசார் நகரில் வெளிநாடுகளைச் சேர்ந்த சிறந்த பல்கலைக்கழகங்களின் கிளைகளை அமைப்பது தொடர்பாக, லண்டனைச் சேர்ந்த (Times Higher Education) என்ற அமைப்புடன் தொழில்துறை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரத்தை அமைப்பதற்கான பணிகளை தொழில்துறையின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, ஊத்துகோட்டை வட்டத்திலுள்ள கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், திருவள்ளூர் வட்டத்திலுள்ள வெங்கல் ஆகிய கிராமங்களில் 870 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அறிவுசார் நகரில் வெளிநாடுகளைச் சேர்ந்த சிறந்த பல்கலைக்கழங்களின் கிளைகளை அமைப்பது தொடர்பாக லண்டனைச் சேர்ந்த டைம்ஸ் உயர்கல்வி என்ற அமைப்புடன் ( times higher education ) தொழில்துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் ஆதரவுடன், டிட்கோவுக்கும், டைம்ஸ் உயர்கல்வி அமைப்புக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி, வெளிநாடுகளில் முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் கிளைகளை இந்த அறிவுசார் நகரத்தில் அமைப்பது தொடர்பான பணிகளை இந்த 3 மூன்று நிறுவனங்களும் இணைந்த மேற்கொள்ள உள்ளது.
சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், திறன்மிகு மையங்கள் மற்றும் அறிவுசார் தொழிலகங்கள் அனைத்தும் அருகருகே, நவீன நகரத்தில் அமைந்திருக்கும்.
உயிரின அறிவியல் (life science), வேளாண் தொழில்நுட்பம் (agri tech), கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு (architecture and design), வான்வெளி மற்றும் பாதுகாப்பு (aerospace & defense), நகர்திறன் (mobility), நிதி தொழில்நுட்பம் (fintech), தொலைத்தொடர்புகள் (telecommunication) போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சியும், புத்தாக்கத்தையும் வளர்க்கும் பணியை தமிழ்நாடு அறிவு சார் நகரம் மேற்கொள்ளும்.
உலகளவில் பல்கலைக்கழகங்களின் தரவரிசை மற்றும் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்வதில் பிரபலமானது. இந்த ஒப்பந்தம் மூலம், அறிவுசார் நகரில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி முறைகள் மற்றும் ஆராய்ச்சி வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மேலும், இது மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை வழங்கும்.
இந்த முயற்சி, அறிவுசார் நகரை உலகளவில் ஒரு முக்கியமான கல்வி மையமாக மாற்றுவதற்கு உதவும் என்பதோடு, பல்வேறு கலாச்சார மற்றும் கல்வி பரிமாற்றங்களுக்கும் வழிவகுக்கும். இது நகரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?






