தமிழ்நாடு

விஜய்க்கு 'NO'.. சிவகார்த்திகேயனுக்கு 'YES': 'பராசக்தி' படத்திற்கு U/A சான்றிதழ்!

'பராசக்தி' திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழை வழங்கியுள்ளது.

விஜய்க்கு 'NO'.. சிவகார்த்திகேயனுக்கு 'YES': 'பராசக்தி' படத்திற்கு U/A சான்றிதழ்!
Parasakthi
நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் வெளியீடாக நாளை (ஜனவரி 10) திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழை வழங்கியுள்ளது. ஆனால், இதே பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்ட நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம், அரசியல் காரணங்களால் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காமல் நீதிமன்றம் வரை செல்ல வேண்டியிருந்த நிகழ்வுடன், தற்போது 'பராசக்தி'க்குத் தடையின்றிச் சான்றிதழ் கிடைத்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

தடைகள் நீங்கி 'பராசக்தி' ரிலீஸ் உறுதி

சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படம் நாளை ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என்று டான் பிக்சர்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தணிக்கைச் சான்றிதழ் குறித்துத் தகவல் வெளியாகாததால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. ஆனால், வெளியீட்டிற்குச் சில மணி நேரங்களே உள்ள நிலையில், மத்திய தணிக்கை வாரியம் இந்தப் படத்திற்குக் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

'ஜனநாயகன்' விவகாரத்தின் தாக்கம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் திரைப்படத்திற்குக் கடைசி நேரம் வரை மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்தது. ஒரே ஒரு உறுப்பினரின் புகாரைக் காரணமாகக் காட்டி, படம் மறு ஆய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, இறுதியாகத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று (ஜனவரி 9) உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா தலையிட்டு, மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவைத் தவறு என்று கூறி ரத்து செய்த பின்னரே, அந்தப் படத்திற்குச் சான்றிதழ் கிடைக்க வழி பிறந்தது. ஆனால், தணிக்கை வாரியம் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.

அரசியல் நோக்கத்திற்காகத் தணிக்கை வாரியம் பயன்படுத்தப்படுவதாகப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்த நிலையில், அதே வாரியம் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்திற்குச் சான்றிதழ் வழங்கியிருப்பது, திரைப்படத் துறைக்குள் அரசியல் தலையீடு எந்த அளவிற்கு மாறுபடுகிறது என்பதை உணர்த்துவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.