தமிழ்நாடு

சென்னையில் குற்றங்கள் வெகுவாகக் குறைப்பு: காவல்துறை தகவல்!

சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் குற்ற நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் குற்றங்கள் வெகுவாகக் குறைப்பு: காவல்துறை தகவல்!
Chennai Police
சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் குற்ற நிகழ்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கொலை மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் குறைந்துள்ளதாகச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

குறைந்த கொலைச் சம்பவங்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் கொலை நிகழ்வுகள் குறைந்துள்ளதாகச் சென்னை காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தலா 105 கொலை நிகழ்வுகள் பதிவாகியிருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் 93 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இவை பெரும்பாலும் அற்ப சச்சரவுகள், திடீர் உணர்ச்சி வசப்படுதல், தவறான உறவுகள், பணம் ஏமாற்றியது, இடப்பிரச்சனை மற்றும் மதுபோதையில் சண்டை போன்ற தனிப்பட்ட காரணங்களால் மட்டுமே நடந்துள்ளன. புதிதாகத் துவங்கப்பட்ட OCU (Organised Crime Unit) பிரிவின் ஒருங்கிணைந்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக ரவுடிகள் தொடர்புடைய கொலைகள் நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் பெருமளவு சரிவு

வழிப்பறி வழக்குகள்: 2023 ஆம் ஆண்டில் 325 ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 256 ஆகவும் இருந்த வழிப்பறி வழக்குகளின் எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்டில் 180 ஆகக் குறைந்துள்ளது.

நகை மற்றும் செல்போன் பறிப்பு: 2023 ஆம் ஆண்டில் 424 ஆக இருந்த இந்த வழக்குகளின் எண்ணிக்கை, 2024 இல் 310 ஆகக் குறைந்து, 2025 ஆம் ஆண்டில் தீவிர ரோந்து, வாகனத் தணிக்கைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் காரணமாக 206 வழக்குகளாகப் பெருமளவில் குறைந்துள்ளது.

வாகனத் திருட்டு: 2023 இல் 1,750 ஆக இருந்த வாகனத் திருட்டு வழக்குகள், 2024 இல் 1,486 ஆகக் குறைந்தது. காவல் துறை உத்திகள் மற்றும் பிரத்யேக தொழில்முறை நடவடிக்கைகளால் 2025 ஆம் ஆண்டில் இது 1,092 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

சீரிய வாகனத் தணிக்கைகள் மற்றும் தகுந்த காவல் பணி செயலிகள் பயன்பாடு மூலம் சென்னையில் பாதுகாப்பைச் சிறப்பாக உறுதி செய்துள்ளதாகச் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.