ரஜினியை சந்தித்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்.. என்னவா இருக்கும்?
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் குகேஷ், முன்னணி நடிகரான ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சீன வீரர் டிங் லிரனுடன் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் மோதினார். 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் முதலில் யார் ஏழரை புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்களே சாம்பியன் என்ற பட்டத்தை வெல்வர் என்ற விதிகளுடன் போட்டி தொடங்கியது. இதில், குகேஷ் மற்றும் டிங் லிரனுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
14-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் தனது சாதுர்யமான நகர்வால் முதலில் ஏழரை புள்ளிகளை பெற்று டிங் லிரனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும், 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையும் படைத்தார். வெற்றி பெற்ற குகேஷுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 11 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் குகேஷிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஐந்து கோடி ரூபாய் வழங்கப்பட்டது. விழாவில், உலக செஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் கொடுத்து குகேஷ் வாழ்த்து பெற்றார். பின்னர் மரத்தால் செய்யப்பட்ட செஸ் போர்ட்டை முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் போது, தமிழ்நாட்டில் திறமையான செஸ் வீரர்-வீராங்கனைகளை உருவாக்க, அரசு சார்பில் செஸ் விளையாட்டுக்கென ‘Home of chess' என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, குகேஷ், நடிகர் சிவகார்த்திகேயனிடம் வாழ்த்து பெற்ற நிலையில் அவர் விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை குகேஷிற்கு பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?