சினிமாவில் தோல்வி.. ஆஸ்திரேலியாவில் தீவு.. மகா விஷ்ணு வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்
சினிமாவில் தோற்றதால் ஆன்மிக சொற்பொழிவாளராக ஆகியதாகவும், கட்டுக் கதைகளை அள்ளிவிடுவது, கண் கட்டி வித்தை காட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டதாகவும் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய சொற்பொழிவாளரும், பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனருமான மகாவிஷ்ணு, முன்ஜென்மம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். அப்போது, முன் ஜென்மத்தில் தவறுகள், பாவங்கள் செய்ததால் தான் இப்போது மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார்.
அப்போது அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர், மகா விஷ்ணுவின் கருத்து தவறு என எதிர்ப்புத் தெரிவித்தார். அதனையடுத்து மகா விஷ்ணுவுக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மகா விஷ்ணுவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மகாவிஷ்ணு கடந்த 8ஆம் தேதி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மாற்றுதிறனாளிகளை குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய சொற்பொழிவாளரும், பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனருமான மகாவிஷ்ணுவை போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். காவல் முடிந்து இன்று பிற்பகல் சைதாப்பேட்டை நீதிபதி குடியிருப்பில் ஆஜர் படுத்துகின்றனர்.
போலீஸ் காவலில் உள்ள மகா விஷ்ணுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 16 வயதிலேயே மேடை பேச்சாளரான மகாவிஷ்ணுவுக்கு சினிமா துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் எனவும் கோடீஸ்வரனாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் சினிமாவில் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்த மகா விஷ்ணு, சினிமா துறையில் நிலைக்க முடியவில்லை.
எனவே தமிழகத்தில் ஆன்மீகப் பேச்சாளர்களுக்கு நல்ல மவுசு இருப்பதால், அந்த தொழிலில் இறங்கினால் பணம் சம்பாதிக்கலாம் என்று இறங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் எழும்பூரைச் சேர்ந்த ஒரு முதியவரிடம் ஆன்மீகம் தொடர்பான தகவல்களை கேட்டு அறிந்ததாகவும், ஆன்மீகத்தை எப்படி மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்பதை வேறு ஒரு நபரிடமும் கற்று தெரிந்துள்ளதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சிறு வயதிலேயே இவ்வளவு ஞானமா? என கேட்பவர்கள் மெய் மறந்து வியக்கும் அளவுக்கு கட்டுக் கதைகளை அல்ல விடுவது கண் கட்டி வித்தை காட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஆன்மீக சொற்பொழிவில் பங்கேற்க பத்தாயிரம், இருபதாயிரம் என பேக்கேஜிங் முறையையும் அறிமுகப்படுத்தி முக்கிய நகரங்களில் சொற்பொழிவு கூட்டங்கள் நடத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தான் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதில்லை எனவும் போலீசாரிடம் திரும்ப திரும்ப மகா விஷ்ணு தெரிவித்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சிறையிலும் தனக்கு ஆதரவாளர்களை உருவாக்குவேன், சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் ஆன்மீக சொற்பொழிவு கூட்டங்களை நடத்துவேன் எனவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மகாவிஷ்ணுவின் வங்கி கணக்கு தொடர்பான ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்த போது சுமார் 10லட்சம் ரூபாய் வரை பணம் இருந்திருப்பதும் அந்த பணம் வந்த வழிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்தியாவை சேர்ந்த சாமியார்கள், ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சம்பாதித்தவர்கள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கரீபியன் கடற்பகுதி அருகிலுள்ள தீவுகளை விலைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மகாவிஷ்ணு சம்பாதித்த பணத்தில் ஆஸ்திரேலியா அருகே ஏதாவது தீவு வாங்கி வைத்துள்ளாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய போது தான் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட நடிகர் சந்திரனை வைத்து நான் செய்த குறும்பு என்ற பெயரில் மகா விஷ்ணு கடந்த 2019ஆம் ஆண்டு திரைப்படத்தை இயக்கி, தயாரிக்க தொடங்கினார். ஆனால், போதிய பணம் இல்லாததால் படம் பாதியிலேயே கைவிடப்பட்டு, பின்னர் மீண்டும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
What's Your Reaction?