போதை மாத்திரைகள் விற்பனை... ரவுடி கும்பல் கைது..!
மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்துவந்த ரவுடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் அண்ணா மெயின்ரோட்டில் அஜந்தா பேருந்து நிலையம் அருகில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக எம்.ஜி.ஆர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனை செய்த போது போதை மாத்திரைகள் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது. அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி ஆகாஷ் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது கூட்டாளிகள் கே.கே நகரைச் சேர்ந்த ரவுடிகள் விக்னேஷ் என்ற வெள்ளை விக்கி, பிரதீப், ரோஷன், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஆகாஷ், அதீஷ் கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 340 போதை மாத்திரை மற்றும் ஒரு டைரி, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. டைரியை ஆய்வு செய்தபோது தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அவர்கள் போதை மாத்திரை சப்ளை செய்துள்ளனர்.
இவர்களிடம் தமிழ்நாட்டில் மட்டும் 80 வாடிக்கையாளர்கள் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மும்பை சென்று அங்கு மெடிக்கல் ஷாப்பில் மொத்தமாக போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்று வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, காஷ்மீர் என பல மாநிலங்களுக்கும் இவற்றை விநியோகம் செய்து வந்துள்ளனர். டைரியில் தங்களது வாடிக்கையாளர் முகவரி, செல்போன் எண்களை குறித்து வைத்துள்ளனர். அதன்படி போதை மாத்திரை வாங்கிய 80 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தற்போது போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் கும்பலை போலீசசார் கைது செய்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு, பகல் பாராமல் அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. வெளியில் நடமாடவே பொது மக்களிடையே பயம் அதிகரித்துள்ளதால், அரசு தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.
What's Your Reaction?