கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி எஸ்.ஏ. பாஷா உயிரிழப்பு
கோவை குண்டு வெடிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான அல்உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ. பாஷா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவையில் கடந்த 1998 ம் ஆண்டு நகரின் பல்வேறு இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக அல் உம்மா இயக்க தலைவர் பாஷா, பொது செயலாளர் அன்சாரி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான பாஷாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை சிறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த பாஷா பரோலில் வந்தார். கடந்த சில மாதங்களாக பரோலில் இருந்து வரும் பாஷா, உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் பாஷாவின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது.
இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து பாஷாவை உறவினர்கள் வென்டிலேட்டர் உதவியுடன் வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீட்டில் வென்டிலேட்டர் அகற்றப்பட்ட நிலையில் மாலை 6.20 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது மகன் இல்லத்தில் பாஷா உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?