போதைப்பொருள் கடத்தல்... சினிமாவை மிஞ்சிய ஓட்டல் அதிபர்கள்.. சிக்கியது எப்படி?

கப்பல் மூலமாக மெத் போதை பொருள் சப்ளை செய்து வந்த ஓட்டல் அதிபர்கள் இருவரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

Nov 28, 2024 - 19:52
 0
போதைப்பொருள் கடத்தல்... சினிமாவை மிஞ்சிய ஓட்டல் அதிபர்கள்.. சிக்கியது எப்படி?
போதைப்பொருள் கடத்தல்... சினிமாவை மிஞ்சிய ஓட்டல் அதிபர்கள்.. சிக்கியது எப்படி?

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 11ஆம் தேதி போதைப் பொருள் சப்ளை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் தெற்கு மண்டல தனிப்படை போலீசார் பிரதீப் மற்றும் கோகுலகிருஷ்ணன் அஸ்வின், ஷாபுதீன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 23 கிராம் கொக்கைன், 4 கிராம் மெத்தம் பெட்டமின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களை குறிவைத்து இவர்கள் போதைப் பொருள் விற்பனை செய்து வந்ததால், இவர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்வது யார் என்பது குறித்து போலீசார் தொடர் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 19ஆம் தேதி போதைப்பொருள் டீலர் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ மெத் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின் பெயரில் மற்றொரு டீலர் மகாதேவன் என்பவரை கைது செய்தனர்.

இவர்களுக்கெல்லாம் போதை பொருள் சப்ளையர் தலைவனாக யார் உள்ளது என தெற்கு மண்டல தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் முக்கிய போதை பொருள் கடத்தல் மன்னனாக செயல்பட்டு வந்த ஓட்டல் அதிபர்கள் திருவல்லிக்கேணியை சேர்ந்த ஜெயினுலாப்தின் என்கிற தீன் மற்றும் அவரது சகோதரர் முகமது ரமால் என்ற செல்வா ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரு சகோதரர்களிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. சகோதரர்கள் இருவரும் ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணியில் பல உணவகங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவற்றை நடத்தி வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக முதலில் இருவரும் எலக்ட்ரானிக் பொருட்களை கப்பல் மூலமாக சட்ட விரோதமாக கடத்தி வரும் குருவியாக செயல்பட்டு வந்துள்ளனர். 

பின்னர் போதைப் பொருள் கடத்தினால் அதிகப்படியான பணம் கிடைக்கும் என்பதை நம்பி கடந்த 10 வருடங்களாக போதைப் பொருட்களை கடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக பெங்களூர், மும்பை போன்ற பகுதிகளில் இருந்து கப்பல் மூலமாக துறைமுகத்திற்கு போதைப்பொருள் கடத்தி வந்து பின்னர் பாரிஸில் இருந்து கைமாற்றும் வேலையில் இவர்கள் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இவர்கள் மெத் போதை பொருளை கப்பல் மூலமாக சென்னைக்கு கடத்தி வந்து பின்னர் கப்பல் மூலமாகவே சட்டவிரோதமாக மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட முறை மெத் போதை பொருளை கடத்தி பெரும் லாபம் ஈட்டி இருப்பதாகவும் அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். 

மெத் போதை பொருள் விற்பனை மூலமாக லாட்ஜ், ஹோட்டல்கள், டீக்கடைகள் ஆகிய சொத்துக்கள் சேர்த்துள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கப்பல் மூலமாக போதைப் பொருள் கடத்திச் செல்லும்போது எப்படி சிக்காமல் தப்பிக்கின்றனர்? என்ற கோணங்களில் விசாரணையானது நடைபெற்று வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow