முதல்வர் பதவியை உதறினேன்.. அரசியல் இப்போது தேவையில்லை.. மனம் திறந்த சோனு சூட்

அரசியல் தலைவர்கள் தனக்கு முதல்வர் பதவி வழங்குவதாக கூறிய நிலையில் அதை வேண்டாம் என்று மறுத்ததாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

Dec 26, 2024 - 14:37
 0
முதல்வர் பதவியை உதறினேன்.. அரசியல் இப்போது தேவையில்லை.. மனம் திறந்த சோனு சூட்
சோனு சூட்

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சோனு சூட், தமிழில் கள்ளழகர், ஒஸ்தி,  தமிழரசன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘அருந்ததி’ படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் செய்த உதவிகள் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். தற்போது, ஏழை எளிய மக்களுக்கு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், இவர்களுக்கு உதவுவதற்காக குழு ஒன்றையும் அமைத்துள்ளார். சோனு சூட் மீதுள்ள எல்லையற்ற அன்பு காரணமாக அவரது ரசிகர்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டாயிரத்து 500 மூட்டைகள் அரிசி கொண்டு அவரது உருவ படத்தை வரைந்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இதுமட்டுமல்லாமல், பல்வேறு வகைகளில் இவரது ரசிகர்கள் சோனு சூட்டை கெளரவப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நடிகர் சோனு சூட் அரசியலில் சேர மறுப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அரசியல் தலைவர்கள் பலர் எனக்கு முதல்வர் பதவியை வழங்குவதாக கூறினார்கள். ஆனால், நான் அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். இதனால், துணை முதல்வர்,  மாநிலங்களவை உறுப்பினர் போன்ற பதவிகளை வழங்குவதாக கூறினார்கள். அதையும் நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.

மக்கள் அரசியலில் சேருவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கும். ஒன்று பதவிக்காக அரசியலில் சேருவார்கள் அல்லது அதிகாரத்திற்காக சேருவார்கள். ஆனால், எனக்கு இந்த இரண்டிலும் விருப்பம் இல்லை. மக்களுக்கு உதவுவதற்காக அரசியலில் சேருவார்கள் என்றால் அதை தான் நான் தற்போது செய்து வருகிறேன். ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் அதை நானே செய்வேன். அதை அடுத்தவரிடம் ஒப்படைக்கும் போது எனக்கு பயம் ஏற்படும். 

ஒருவர் பிரபலமடைய தொடங்கும் போது அவர்கள் வாழ்க்கையில் உயரத் தொடங்குவார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் அதிக உயரத்திற்கு செல்லும் பொழு அங்கு நமக்கு ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படும். உயரத்திற்கு சென்ற பின்பு அதை எப்படி தக்க வைத்து கொள்கிறேம் என்பது மிக முக்கியமாகும்.

நிறைய பேர் என்னிடம் கூறுவார்கள் அரசியலில் சேர்ந்தால் டெல்லியில் ஆடம்பரமான வீடு, பலத்த பாதுகாப்பு, அரசு முத்திரையுடன் லட்டர் ஹெட் (letterhead) போன்ற ஆடம்பரங்கள் கிடைக்கும் என்று ஆனால், நான் தற்போது அரசியலில் சேர தயாராக இல்லை. சில வருடங்களுக்கு பின்பு இந்த கண்ணோட்டம் மாறலாம். நான் அரசியலை வெறுப்பவன் அல்ல. நான் அரசியல்வாதிகளை மதிக்கிறேன் என்று கூறினார்.

சோனு சூட்டின் சகோதரி மால்விகா சூட் 2022-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். இவர் பஞ்சாபின் மோகா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அமன்தீப் கவுர் அரோரா-விற்கு எதிராக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow