கர்நாடகாவிற்கு தமிழ்நாடு பலத்தை காட்ட வேண்டும்; கூட்டத்தை கூட்ட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
Anbumani Ramadoss : காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டால் தமிழ்நாடு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்திற்கு காட்ட முடியும்.
காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டால் தமிழ்நாடு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்திற்கு காட்ட முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss on Cauvery Water Issue : தமிழகத்துக்கு 2023 ஜூன் மாதத்தில் இருந்து 2024 ஏப்ரல் 28-ம் தேதி வரை கர்நாடக அரசு 174.497 டிஎம்சி நீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தது. ஆனால், 78,728 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இன்னும் 95.770 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது. இதுதவிர, பிப்ரவரி முதல் ஏப்ரல் 28 வரை பிலிகுண்டுலுவில் 7.333 டிஎம்சி நீரை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 2.016 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதில், 5.317 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் 12.95 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1,200 கன அடி நீர்திறக்கப்பட்டு வந்த நிலையில், இது 1000 கன அடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பை கணக்கிட்டு, தமிழகத்துக்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய 2.5 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 2.5 டிஎம்சி நீரையும் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து கோரி வருகிறது.
ஜூலை 12 முதல் ஜூலை 31 வரையில் நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி (11,500 கன அடி) தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டும் அந்த மாநில அரசு அதனை மறுத்துவருகிறது. மேலும், இதில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா, தினமும் 8,000 கன அடி நீர் மட்டும் திறந்துவிட முடிவெடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கக் கூடிய, காவிரியில் தமிழகத்தின் உரிமையை பறிக்கக் கூடிய செயலை செய்வதற்கான கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையே அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையேற்று நடத்துகிறார். அனைத்துக் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உழவர் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை அழைத்து கலந்தாய்வு நடத்துகிறார்.
அதேபோல், தமிழ்நாட்டிலும் காவிரி பிரச்சினை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றால் தான் அதற்கு முக்கியத்துவம் கிடைக்கும். காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டால் தான் காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்திற்கும் மற்றவர்களுக்கும் காட்ட முடியும்.
எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும்; தமிழகத்தின் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் போன்ற நோக்கங்களைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று நடத்த வேண்டும்.
What's Your Reaction?