அமைச்சர் உதயநிதி சென்றால் மக்களுக்கு நன்மை பிறக்கும்! - நீதிபதிகள் கருத்து
Kalvarayan Hills : தமிழக முதலமைச்சரோ அல்லது விளையாட்டு துறை அமைச்சர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருடன் கல்வராயன் மலைப் பகுதிக்குச் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

Kalvarayan Hills : கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம்(Chennai High Court) தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
கடந்த 10ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட, 95 சதவீதம் பழங்குடி மக்கள் வசிக்கும் கல்வராயன் மலைப்பகுதி(Kalvarayan Hills) 1976 ஆம் ஆண்டில் தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 1996 ஆம் ஆண்டு முதல் தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்து இருக்கிறது. அந்த பகுதி மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அந்த மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.
மேலும், 1947 முதல் நாம் உரிமைகளை அனுபவித்து வருகிறோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், 1976இல் இருந்து தான் அவர்கள் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் நாமும் அங்கிருந்து கஷ்டங்களை உணரவேண்டும் எனவும் அரசின் நலத் திட்டங்கள் அந்த மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? அங்கு வசிக்கும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அரசு சலுகைகள் சென்றடைந்துள்ளனவா? அந்த பகுதி மக்கள் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன? என ஜூலை 24ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்த கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கைகள் தயாராகி வருவதாகவும், நாளை மறுநாள் அதனை தாக்கல் செய்வதாகவும் கூறினார்.
இதை ஏற்று வழக்கு விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், கள்ளச் சாராயம் மட்டுமே அந்த பகுதி மக்களின் ஒரே ஆதாரமாக உள்ள நிலையில் அதனை ஒழிக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்களின் வாழ்வாதரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.
கல்வராயன் மலைப்பகுதியாக உள்ளதால் அந்த பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர். அந்த பகுதி மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டுமெனவும் நீதிபதிகள் கூறினர்.
அந்த பகுதிக்கு தாங்கள் செல்வதை விட, தமிழக முதலமைச்சர் சென்று பார்வையிட்டால் அந்த பகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை விளையும் என தெரிவித்தனர். முதலமைச்சரால் செல்ல முடியவில்லை என்றால் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(Udhayanidhi Stalin), ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சருடன் சென்று பார்வையிடலாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.
What's Your Reaction?






