தமிழ்நாடு

செல்போன் டவரின் பாகங்களை ‘அபேஸ்’ செய்த கும்பல்.. கள்ளச்சந்தையில் விற்றது அம்பலம்

செல்போன் டவர்களில் உள்ள பாகங்களை திருடி வடமாநிலங்களுக்கு விற்பனை செய்யும் கும்பல்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

செல்போன் டவரின் பாகங்களை ‘அபேஸ்’ செய்த கும்பல்.. கள்ளச்சந்தையில் விற்றது அம்பலம்
செல்போன் டவர் பாகங்களை திருடி விற்ற கும்பல் கைது

டவர்களில் தொழில்நுட்ப பாகங்கள் திருடப்படுவதாக 10 மாவட்டங்களில் இரண்டு வருடத்தில் 185 வழக்குகள் குவிந்த நிலையில், 5 மாவட்ட காவல்துறை இணைந்து வட மாநிலத்தவர்கள் உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் திருவண்ணாமலை ராணிப்பேட்டை உள்ளிட்ட வடக்கு மண்டலம் முழுவதும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிறுவியுள்ள டவர்களில் பொருத்தப்பட்டுள்ள தகவல் பரிமாற்றங்களுக்கு மிகவும் முக்கியமான சாதனங்களான ரேடியோ ரிமோட் யூனிட் மற்றும் பிராட்பேண்ட் யூனிட். இதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களை சமூக விரோதிகள் திருடுவதாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. 

இதனால் தொலைத்தொடர்பு கட்டமைப்பு மற்றும் இணையதள இணைப்பு பாதிக்கப்படுவதும் தெரியவந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக டவர்களிலிருந்து மேற்கூறிய தொலைத்தொடர்பு கருவிகள் திருடப்பட்டு தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்களுக்கு விற்கப்பட்டு வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

குறிப்பாக கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததும், அதன் மூலம் லாபம் பார்க்க முயற்சித்ததும் தெரிய வந்தது. இது போன்ற புகார்கள் பெறப்பட்டு வடக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் சுமார் 185 வழக்குகள் தகவல் தொடர்பு சாதனங்கள் திருட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

டவர்களில் நடைபெறும் இந்த திருட்டு சம்பவங்களை தடுப்பதற்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம்,  திருட்டு வழக்குகளை விரைவில் கண்டுபிடிக்க உத்திரவிட்டார். அதன் அடிப்படையில் வடக்கு மண்டலத்தில் செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையில் சுமார் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர்.

இவ்வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளில் பலர் டெல்லி மற்றும் உத்திரபிரதேசம் பகுதிகளை சேர்ந்த எலக்ட்ரானிக்கல் கழிவுகள் தொடர்பான ஸ்கிராப் பிசினஸ் செய்யும் நபர்களுடன் சேர்ந்து, கூட்டுச் சதியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது.

குறிப்பாக உள்ளூர்களில் டவர் தொடர்பான பழுதுகளை சீர் செய்வது போன்ற போர்வையில் இந்த கும்பல்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. திருடப்படும் தகவல் தொடர்பு சாதனங்கள் வாகனங்கள் மூலம் தமிழ்நாட்டைத் தவிர டெல்லி உள்ளிட்ட பல வடமாநில பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை அடுத்து வடக்கு மண்டலம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின்  கண்காணிப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவ்வழக்குகளில் சம்மந்தப்பட்ட திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து வழக்கு தொடர்பான பல்வேறு பொருட்கள் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவரிகளான உத்திர பிரதேசத்தை சேர்ந்த காமீல், சும்செத், இருவர் டெல்லியிலும், நதீம் மாலிக், முகமது அபித், உத்திரபிரதேசத்தில் தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.  

இத்திருட்டு வழக்கில் தொடர்புடைய 29 குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து திருடப்பட்ட தொலைத் தொடர்பு கருவிகள் பறிமுதல் செய்யப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடைய மற்ற நபர்களையும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.