ஆசை நாயகியை சொந்தம் கொண்டாடுவது யார்? - நண்பருக்கு மதுவில் விஷம் வைத்து கொலை
ஜெரால்டுக்கு மனசுக்குள் சஞ்சலத்தை ஏற்படுத்த, தனது செல்போனில் இருந்து, அந்த பெண்ணிற்கு அடிக்கடி அழைத்து காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
திருமணத்தை மீறிய உறவு காரணமாக நண்பருக்கு மதுவில் விஷம் வைத்து கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பில்லா விடந்தை கிராமத்தை சேர்ந்த டிரைவர்களான 24 வயது ஜெரால்டும், 32 வயது ஜோதிபாசும் நண்பர்கள். இருவரும் கடந்த 9ஆம் தேதி மாலை மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துவிட்டதாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெரால்டு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரம்பூர் போலீசார் ஜோதிபாசுவிடம் விசாரணை செய்தனர்.
ஜோதிபாசுவின் மனைவி அவரிடம் சண்டையிட்டு, கோயம்புத்தூருக்கு பிரிந்து சென்றுவிட்டதால், அந்த விரக்தியில் மதுவில் பூச்சிமருந்து கலந்து குடித்து அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது அங்கு வந்த ஜெரால்டு, ஜோதிபாசு, விஷம் கலந்த மதுபானத்தை குடித்துவிட்டதாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.
தொடர்ந்து ஜோதிபாசு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பெரம்பூர் போலீசார், ஜெரால்டு உயிரிழப்பு குறித்து இயற்கைக்கு மாறான மரணமாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஜெரால்டை, ஜோதிபாசு திட்டம்போட்டே கொலை செய்திருப்பதாகவும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும், ஜெரால்டின் உறவினர்கள் செம்பனார்கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கணவரைப் பிரிந்து வாழும் பெண் ஒருவருடன், ஜெரால்டு, ஜோதிபாசு இருவருமே பழகி வந்ததாகவும், அதன் காரணமாக இருவருக்குள்ளும் தகராறு இருந்துவந்ததாகவும், அதனால் ஜோதிபாசு கொலை செய்திருக்கலாம் என்றும் உறவினர்கள் கூறினர். இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய ஜோதிபாசுவைப் பிடித்து பெரம்பூர் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஜோதிபாசு முதலில் கைக்குழந்தையுடன் உள்ள ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியுள்ளார். அந்த பெண்ணுக்கு ஜோதிபாசு மூலம் ஓர் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில், பக்கத்து ஊரைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட மற்றொரு பெண்ணுடன் ஜோதிபாசுவுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதல் பெண், தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கோயம்புத்தூருக்கு சென்றுவிட்டார். இதனால், இரண்டாவது பெண்ணுடன் எந்தவித இடையூறும் இல்லாமல் ஜோதிபாசு கள்ளத்தொடர்பு தொடர்ந்துள்ளார்.
ஒருநாள் தனது செல்போனில் சார்ஜ் இல்லை என்பதால் ஜெரால்டு போனை வாங்கி தன் கள்ளகாதலியுடன் ஜோதிபாசு பேசியுள்ளார். இது ஜெரால்டுக்கு மனசுக்குள் சஞ்சலத்தை ஏற்படுத்த, அவரும் தனது செல்போனில் இருந்து, அந்த பெண்ணிற்கு அடிக்கடி அழைத்து பேசி, தானும் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். தனது ஆசைநாயகிக்கு ஜெரால்டு வலைவிரிப்பது தெரியவந்த ஜோதிபாசு, தன்னை ஓவர்டேக் செய்ய நினைக்கும் ஜெரால்டுக்கு முடிவுகட்ட திட்டமிட்டவர், அதற்காக நடிகர் வடிவேலுவின் சூனா பானா காமெடி டெக்னிக்கை பயன்படுத்தி உள்ளார்.
இதையடுத்து, ஜோதிபாசு, நல்லாத்தூர் பகுதிக்குச் சென்று மதுபாட்டில் வாங்கிக் கொண்டு நல்லாடை கிராமத்தில் உள்ள மருந்து கடையில் தென்னைக்கு வைக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தான மோனாகுரோட்டாபஸ் ஒரு பாட்டிலையும் வாங்கிக்கொண்டு வந்துள்ளார். தென்னமர சாலையில் அமர்ந்து மதுவில் பூச்சிமருந்தை கலந்தவர், அந்த பக்கம் மதுபோதையில் வந்த ஜெரால்டுவுக்கு விஷம் கலந்த மதுவை அதிகம் கொடுத்துள்ளார்.
பின்னர் கள்ளகாதலிக்கு போன் செய்து ஜெரால்டு விஷம் கலந்த மதுபானத்தை குடித்துவிட்டதாகவும், இனி தொல்லை இல்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து, தானும் கொஞ்சம் விஷ மதுவைக் குடித்துவிட்டு வாந்தி எடுத்தவர், ஜெரால்டு குடும்பத்தினருக்கு தகவல் அளிக்க, அவர்கள் மூலம் மருத்துவமனையில் சேர்ந்து கொண்டதாக, விசாரணையில் ஜோதிபாஸ் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தற்கொலை நாடகமாடி நண்பருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த ஜோதிபாசுவை கைது செய்த போலீசார், கொலை வழக்கு பதிந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?