புல்லட் பைக்குகளின் பேட்டரிகள் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட திருடன் புல்லட் ராஜை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி காட்சி வெளியானது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் சில திருடர்கள் போலீசாரே அதிர்த்து போகும் அளவிற்கு விநோத திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பனியன் திருட்டு, செல்போன் கோபுர திருட்டு, 90ஸ் கிட்ஸ் மிட்டாய்கள் திருட்டு, ஆடுகள் திருட்டு என பல விநோத திருட்டு சம்பங்கள் நடந்திருக்கிறது. தற்போது அந்த லிஸ்டில் இணைந்துள்ளது சென்னையில் நடந்த இந்த மற்றொரு விநோத திருட்டு.
சென்னை கோயம்பேடு விருகம்பாக்கம் வளசரவாக்கம் மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் பல மாதங்களாக இரவு நேரத்தில் பைக்குகள் திருடப்பட்டு வந்தன. குறிப்பாக பல புல்லட் பைக்குகளில் பேட்டரிகள் மட்டும் திருடப்பட்டன.
இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சமீபத்தில் கோயம்பேடு அருகே பைக் ஒன்றில் இருந்து பேட்டரி திருடப்படும் சிசிடிவி காட்சிகள் கோயம்பேடு போலீசாருக்கு கிடைத்தன. அதன் அடிப்படையில் கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளில் உள்ள நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் உள்ள தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் புல்லட் ராஜ் என்று அழைக்கப்படும் ராஜ் என்பது தெரிய வந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்குகள் மற்றும் அவற்றின் பேட்டரியை திருடுவதை இவர் வழக்கமாக வைத்திருந்து உள்ளார்.
மேலும் படிக்க: கவரைப்பேட்டை ரயில் விபத்து: செல்போன்கள் ஆய்வு.. தீவிர விசாரணையில் ரயில்வே காவல்துறை
அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். புல்லட் பைக்குகளின் பேட்டரியை தொடர்ந்து திருடுவதால் இவர் புல்லட் ராஜ் என அழைக்கப்படுகிறார். அவரிடம் இருந்து ஐந்து திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.