கவரைப்பேட்டை ரயில் விபத்து: செல்போன்கள் ஆய்வு.. தீவிர விசாரணையில் ரயில்வே காவல்துறை
கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் பதிவாகி உள்ள செல்போன்களை ஆய்வு செய்து வருகிறது ரயில்வே காவல்துறை.
கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் பதிவாகி உள்ள செல்போன்களை ஆய்வு செய்து வருகிறது ரயில்வே காவல்துறை.
சென்னை: நேற்றிரவு கவரப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து புறப்பட்ட பாக்மதி எஸ்பிரஸ் ரயில், சென்னை வழியாக பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில், லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் மோதியது. இந்த விபத்தில் 13 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதி மக்களும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில், எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்றாலும், 19 பேர் காயம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1300-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தில் அமைச்சர் ஆவடி நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
மெயின் லைனில் மட்டுமே வருவதற்கு சிக்னல் கொடுக்கப்பட்ட நிலையில், எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனில் வந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்த அவர், 15 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீராகும் எனவும் கூறினார்.
இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தில் ரயில்வே ஊழியர்கள் 250 பேரும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 100 பேரும் இணைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் தர்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, ரயில் விபத்து சம்பவத்திற்கு லுப் லைன் சந்திப்பில் போல்ட் நட்டு உள்ளிட்டவற்றை கழற்றப்பட்டதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.ஏற்கனவே இதுவரை 30க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கு சம்பந்தமாக நேரில் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் விசாரணை அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ரயில்வே சட்டப்பிரிவு 154 நீக்கி விட்டு ரயில்வே சட்டப்பிரிவு 150 (ரயிலை சேதப்படுத்துதல் அல்லது தகர்க்க முயலுதல்) சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் பதிவாகி உள்ள செல்போன்களை ஆய்வு செய்து வருகிறது ரயில்வே காவல்துறை. விபிஎண் பயன்படுத்தி போன் பேசி சதி திட்டம் தீட்டினார்களா என ரயில்வே போலீசார் தீவிர விசாரணை.
மேலும் படிக்க: இருக்கு..கனமழை இருக்கு.. - எச்சரிக்கும் வனிலை மையம்..எதிர்கொள்ள தயாரா இருங்க மக்களே!
ரயில் விபத்து நடப்பதற்கு முன்பாக அந்த பகுதியில் இருந்தவர்களின் டவர் லொகேஷனை எடுத்து அதனை ஆய்வு செய்யும் பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். போன் பேசியவர்களின் பட்டியலை எடுத்த போது, ஆயிரக்கணக்கானோர் பேசியிருப்பதால் அதை ஆய்வு செய்யும் பணிகளில் ரயில்வே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?