பவுர்ணமி; திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்
நாளை (ஆகஸ்ட் 19) பவுர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் கோயில் பின்புறம் உள்ள மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி பவுர்ணமி நாளை (ஆகஸ்ட் 19) மாலை 6.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 20ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகிறது. திருவண்ணாமலையில் பவுர்ணமி விழா மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளதால் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை (ஆகஸ்ட் 19) பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னை மட்டுமில்லாது பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில், இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று (ஆகஸ்ட் 18) 130 பேருந்துகளும், நாளை (ஆகஸ்ட் 19) 250 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. அதே போல் சென்னை கோயம்பேட்டிலிருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை மாதாவரத்திலிருந்து தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளுடன் 40 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 265 பேருந்துகள் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.
மேலும் படிக்க: 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 50 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர். திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஒசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
What's Your Reaction?