Jammu Kashmir: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகும் உமர் அப்துல்லா... காங்கிரஸ் கூட்டணி அபாரம்!
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக உமர் அப்துல்லா விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது, 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக். 1ம் தேதி 3வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து வெளியான எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு இருக்கும் எனவும், காங்கிரஸ் வெற்றிப் பெறும் என்றும் சொல்லப்பட்டது. அதன்படியே தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் ‘நயா காஷ்மீர்’ என்ற முழக்கத்துடன் தனது பிரசாரத்தை முன்னெடுத்தது பாஜக. ஆனால் அதுவே பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014க்குப் பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக தேர்தல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில், 46 தொகுதிகளில் வெற்றிப் பெறும் கட்சி ஆட்சியமைக்க முடியும்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் முன்னாள் முதலமைச்சர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்தது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 44 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. மேலும் 4 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம் 22 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ள பாஜக, 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
PDP கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்லிதாக கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா முதலமைச்சராக பதவியேற்பார் என அவரது தந்தையும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரித்துள்ளார். தேசிய மாநாட்டுக் கட்சியின் வாக்கு வங்கி 21.10 சதவீதமாகவும், காங்கிரஸ் வாக்கு வங்கி 11.96 சதவீதமாகவும் உள்ளது. அதேபோல், தனித்துப் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு வங்கி 26.36 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?