நீ வருவாய் என படத்தில் விஜய்…..காதலுடன் படத்தில் அஜித்.... இயக்குனர் ராஜகுமாரனின் மலரும் நினைவுகள்

Director Rajakumaran About Actor Vijay, Ajith Kumar : நீ வருவாய் என படத்தி்ன் சம்பளம் குறித்து விசாரித்தால் அஜித் சம்பளம் வாங்கவில்லை. அவருக்கும் சூப்பர்குட் பிலிம்சுக்கும் வேறொரு ஒப்பந்தம் இருந்தது. அதனால், அந்த படத்துக்கு சம்பளம் இல்லை. தேவயானிக்கு 8 லட்சம் சம்பளம், சூரியவம்சம் படத்துக்கும், ஆனந்தம் படத்துக்கும் 8லட்சம்தான். இயக்குனர் ராஜகுமாரனுக்கு ஒன்றரை லட்சம் சம்பளம்.

Sep 6, 2024 - 23:32
Sep 7, 2024 - 15:37
 0
நீ வருவாய் என படத்தில் விஜய்…..காதலுடன் படத்தில் அஜித்....  இயக்குனர் ராஜகுமாரனின் மலரும் நினைவுகள்
Nee Varuvaai Ena Movie Director Rajakumaran Interview


ராஜகுமாரன் இயக்கத்தில் பார்த்திபன், தேவயானி, அஜித் நடித்த ‘நீ வருவாய் என’ படம்  ரிலீஸ் ஆகி 25 ஆண்டுகளை கடந்த நிலையில், அந்த படத்தில் அஜித் கேரக்டரில் நடிக்க இருந்தவர் விஜய், அதேபோல், தான் இயக்கிய ‘காதலுடன்’ படத்தில் அப்பாஸ் கேரக்டரில் நடிக்க  இருந்தவர் அஜித் என்று பரபரப்பு தகவல்களை கூறியிருக்கிறார் ராஜகுமாரன். அவரிடம் பேசினோம்.

விக்ரமன் சொன்ன ஐடியா

 Director Rajakumaran About Actor Vijay, Ajith Kumar : ‘‘ஆமாங்க, இதெல்லாம் உண்மைதான். நான் விக்ரமன்சார் உதவியாளர். அவரிடம் பணியாற்றும்போதே நீ வருவாய் என கதைக்கருவை யோசித்து, அதை மெருகேற்றினேன். சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில், எம்ஜிஆர் பள்ளி அருகே என் ரூம் இருந்தது. அங்கேதான் இந்த படத்தின் கரு, வசனம் உருவானது. எனக்கு பூர்வ ஜென்ம கதைகள் மீது பாசம் அதிகம். அதை வைத்து முதல் படத்தை இயக்க முடியாது என்பதால் புதுசாக இருக்கட்டுமேனு இப்படி யோசித்தேன். அந்த கண் மாற்றும் ஐடியா உருவானது. இதற்கிடையில் விஜயகாந்த்சாருக்கு ஒரு கதை சொன்னேன், குஷ்பு மேடத்துக்கும் சொன்னேன். அந்த படம் பண்ணுவது உறுதியானது. ஆனால்,  ஆனால், அந்த கதை கேட்ட என் குருநாதர் விக்ரமன், நீங்க முதல் படம் பண்ணுறீங்க. அது வித்தியாசமாக இருக்கணும். அந்த கண் மாற்றும் கதை எடுங்க என்று சொல்லி, சூப்பர் குட் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியிடம் அனுப்பினார். அவர் கதை கேட்டு ஓகே செய்தார்.

விஜய் சொன்ன விஷயம்

அது மட்டுமல்ல, அஜித்துக்கு போன் செய்த ஆர்.பி.சவுத்ரி, ராஜகுமாரன் ஒரு கதையுடன் வருவார். அதை கேளுங்க என்றார். கதை கேட்ட அஜித் கவுரவ ரோல் என்பதால் 15நாட்கள் கால்ஷீட் கொடுப்பதாக சொன்னார். உடனே, நான் கதையை இன்னும் மெருகேற்றினேன். அஜித் ஒரு ஹீரோ ஓகே. இன்னொரு ஹீரோ யார் என்று தேடியபோது, முரளி நினைவு வந்தார். அவரோ கதை கேட்டு கட்டி பிடித்து பாராட்டினார். ஆனால், 2 ஹீரோ சப்ஜெக்ட் வேணாம் என்றார். அடுத்து பிரசாந்த், பிரபுவரை யோசித்தேன். அது நடக்கவில்லை. அடுத்து விஜய்சாருக்கு சொன்னேன். அதாவது பார்த்திபன் கேரக்டரில் விஜய், கவுரவ வேடத்தில் அஜித் என்று பிளான் செய்தேன். ஆனால், விஜயோ நான் கெஸ்ட் ரோல் பண்ணுறேன் என்று, அஜித் கேரக்டருக்கு விருப்பப்பட்டார். அதனால், விஜய், அஜித்தை வைத்து என்னால் படம் எடுக்கவில்லை. கடைசியில் பார்த்திபன் ஒப்பந்தம் ஆனார். நாகர்கோவில் சுற்று வட்டாரத்தில் நீ வருவாய் என படப்பிடிப்பை முடித்தோம்’’ என்றார்.

அப்ப காதல் இல்லை

சரி, இந்த கதையில் தேவயானி வந்தது எப்படி என்று கேட்டால் ‘‘ நான் சூரியவம்சம் படத்தில் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே தேவயானியை தெரியும். அவரிடமும் இந்த கதையை முன்பே சொல்லியிருக்கிறேன்.  அந்த சமயத்தில் சினிமா ஸ்ட்ரைக் நடந்தது கொண்டிருந்தது. நான் தற்செயலாக தேவயானி வீடு அருகே சென்றபோது, என்னை ரோட்டில் பார்த்து தேவயானி அழைத்தார். வீட்டுக்குள் காபி கொடுத்து உபசரித்தார். அப்போது இந்த கதையை சொன்னது இன்றும் நினைவுக்கு வந்தது. அப்புறம், இந்த படம் கமிட்டானதும், பூந்தோட்டம் படப்பிடிப்பில் இருந்த அவரிடம் மீண்டும் கதை சொல்ல முயற்சிக்க, அந்த கதை எனக்கு தெரியும், நான் நடிக்கிறேன், வாழ்த்துகள் என்றார். இப்படிதான் பார்த்திபன், அஜித், தேவயானி கதைக்குள் வந்தனர். அந்த சமயத்தில் எங்களுக்குள் காதல், வேறு எதுவும் இல்லை. சூரியவம்சம் படத்தில் தேவயானி கேரக்டர் பெயர் நந்தினி, அந்த சென்டிமென்ட்டில் இ்ந்த படத்திலும் அதே பெயர்’ என்றார்.

வாலி படத்தை முடித்துவிட்டு

அஜித் பற்றி கேட்டபோது ‘‘வாலி படத்தை முடித்துவிட்டு, 199ம் ஆண்டு நீ வருவாய் என படப்பிடிப்புக்காக நாகர்கோவில் வந்தார். வாலி பெரிய ஹிட். என்னிடம் படம் பற்றி கேட்டால் என்ன செய்வது என யோசித்து அங்கே இரவு காட்சியை பாதி மட்டும் பார்த்தேன். மறுநாள் எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அஜித் பெரிதாக எதுவும் கேட்கலை. ஏற்கனவே காதல் கோட்டை படத்தில் அஜித், தேவயானி இணைந்து வெற்றி படம் கொடுத்து இருந்ததால், படப்பிடிப்பு நன்றாக சென்றது. படம் பெரிய ஹிட் ஆனது. நீ வருவாய் என படத்துக்கு 100வது நாள் விழாவை சென்னையில் நடத்தினோம். அதிலிருந்து அஜித்துடன் நல்ல பழக்கம். அவர் மீண்டும் உங்களுக்காக ஒரு படம் பண்ணுகிறேன் என்றார். சில ஆண்டுகள் கழித்து, எங்களுக்கு திருமணம் ஆனவுடன் காதலுடன் படத்தை சொந்தமாக தொடங்கினோம். அதில் அஜித்தை அப்பாஸ் கேரக்டரில் நடிக்க வைக்க முயற்சித்தேன். ஆனால், அஜித்துக்கு நாங்கள் சொந்த படம் பண்ணுவதில் விருப்பம் இல்லை.அது வேண்டாம். நான் உங்களுக்கு டேட் தர்றேன், வேறு கதை பண்ணுங்க  என்றார். ஆனால், சூழ்நிலை காரணமாக நாங்கள் அவர் பேச்சை கேட்கவில்லை. கடைசியில் அவர் கேரக்டரில் அப்பாஸ் நடித்தார். காதலுடன் படப்பிடிப்பு ஸ்ரீபெரும்புதுாரில் படப்பிடிப்பு நடந்தபோது அங்கே வந்தார். அவருக்கு படப்பிடிப்பு நடப்பதில் உடன்பாடு இல்லை. நாங்க கஷ்டப்படக்கூடாது என்று நினைத்தார். ஆனால், அவர் எண்ணத்தை நாங்க புரிந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வில்லன் படப்பிடிப்பில் அவரை பார்த்தபோது காதலுடன் பட பிரச்னை, நஷ்டத்தை அறிந்து இருந்தார். எல்லாம் விதி என்று நெற்றியில் கை வைத்து காண்பித்தார். நான் சிரித்துக்கொண்டேன். திருப்பாச்சி உட்பட பல படப்பிடிப்பில் விஜயை சந்தித்து இருக்கிறேன். குடும்பத்தை பற்றி அக்கறையாக விசாரிப்பார்.

விஜய், அஜித்தை பார்த்தது இல்லை

பார்த்திபன் பற்றி கேட்டபோது, ‘அவர் என் குருநாதர் விக்ரமனின் குருநாதர். நான் அவரிடம் பணியாற்றி முயற்சித்தேன். அது நடக்கவில்லை.கடைசியில் அவரைவைத்து படம் பண்ணினேன். எந்த சமயத்திலும் அவர் தலையீடு இல்லை. சென்னையி்ல் நடந்த நீ வருவாய் என 25வது ஆண்டு விழாவிலும் பங்கேற்றார். ஆனால், அஜித்திடம் மட்டும் இன்னமும் என்னால் அந்த ஷீல்டை கொடுக்க முடியவில்லை. அந்த விழா நடக்க சித்ரா லட்சுமணன்தான் காரணம். சிறப்பாக நடத்தினார். அஜித், விஜயுடன் தேவயானி நடித்து இருக்கிறார். ஆனால், என் மகள்கள் அவர்களை நேரில் பார்த்தது இல்லை.’’ என்று முடித்தார் ராஜகுமாரன்.

சம்பளம் எவ்வளவு

எக்ஸ்ட்ரா: நீ வருவாய் என படத்தி்ன் சம்பளம் குறித்து விசாரித்தால்  அஜித் சம்பளம் வாங்கவில்லை. அவருக்கும் சூப்பர்குட் பிலிம்சுக்கும் வேறொரு ஒப்பந்தம் இருந்தது. அதனால், அந்த படத்துக்கு  சம்பளம் இல்லை. தேவயானிக்கு 8 லட்சம் சம்பளம், சூரியவம்சம் படத்துக்கும், ஆனந்தம் படத்துக்கும் 8லட்சம்தான். இயக்குனர் ராஜகுமாரனுக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் என தகவல் வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow