விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்..
விநாயகர் சதுர்த்தி விழா நாளை நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களை வாங்க மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் விநாயகர் சிலை மற்றும் பூஜை பொருட்களை வாங்க மார்க்கெட் பகுதிகளில் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை (7-ந்தேதி) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரி கிராமம் மற்றும் நகர பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு பொருட்கள் விற்பனை களைகட்டி உள்ளது. வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக விநாயகர் சிலை, பூக்கள், பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கிறார்கள்.
அதன்படி நேரு வீதி பெரிய மார்க்கெட் பகுதிகளில் பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதியது. மேலும் சாரம் மார்க்கெட் மற்றும் நெல்லித்தோப்பு மார்க்கெட் முதலியார் பேட்டை மற்றும் முத்தியால்பேட்டை உள்ளிட்ட மார்க்கெட் பகுதிகளிலும் மதகடிப்பட்டு, திருக்கனூர், பாகூர், ஏம்பலம், கரையாம்பத்தூர், வில்லியனூர் உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் விநாயகர் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
அதன்படி புதுச்சேரி மார்க்கெட்டுகளில் வண்ணம் தீட்டப்படாத விநாயகர் அரை அடி மண் சிலைகள் ரூ.100-க்கும் 1 அடி 150 க்கும் விற்கப்படுகிறது. வண்ணம் தீட்டப்பட்ட அலங்கார வடிவங்களை கொண்ட சிறிய விநாயகர் சிலைகள் ரூ.200 முதல் ரூ.3000 வரை விற்கப்படுகிறது.
விநாயகருக்கான அலங்கார குடை ரூ.40 முதல் ரூ.60 வரை உள்ளது. மல்லி, கனகாம்பரம், வாடாமல்லி, சாமந்தி உள்ளிட்ட பூக்கள், துளசி, அருகம்புல், எருக்கம் பூ மாலை, குருத்தோலையால் ஆன தோரணம், மா இலை உள்ளிட்ட அனைத்து பொருட்களும், பழங்களும் மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. ஆனால் பூக்கள் விலை வழக்கத்தை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.
இருப்பினும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட மக்கள் இன்றே தயாராகி வருகின்றனர். இதனால் காலை முதலே பொதுமக்கள் பொருட்களை வாங்க புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது இதன் காரணமாக நேரு வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது
What's Your Reaction?