Kamal Haasan: அட்லீ – சல்மான் கான் கூட்டணியில் கமல்ஹாசன்... அன்பறிவ் ப்ராஜெக்ட் KH 237 ட்ராப்...?
தக் லைஃப், இந்தியன் 3-ஐ தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரிலீஸான ‘விக்ரம்’ மூலம் கம்பேக் கொடுத்த கமல்ஹாசன், அடுத்தடுத்து இந்தியன் 2, கல்கி, தக் லைஃப் படங்களில் கமிட்டானார். இதில் இந்தியன் 2, கல்கி முதல் பாகம் வெளியாகிவிட்டன. இந்தியன் 3, கல்கி இரண்டாம் பாகம், தக் லைஃப் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளன. இதனிடையே ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருந்த கமல், அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் ஹெச் வினோத் தற்போது தளபதி விஜய்யின் 69வது படத்தை இயக்கவுள்ளார். இதனையடுத்து கமலின் 237வது படத்தை அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், கமல் – அன்பறிவ் மாஸ்டர்ஸ் இணையவிருந்த படமும் ட்ராப் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல் – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அது தற்போது உறுதியாகிவிட்டதால், அன்பறிவ் மாஸ்டர் இயக்கும் படத்தில் இருந்து கமல் விலகிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கமல் – சல்மான்கான் நடிக்கும் படத்தை இயக்க அட்லீ ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லீ, பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கினார். கடந்தாண்டு வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. இதனால் கோலிவுட்டை விட பாலிவுட் ஹீரோக்களிடம் அட்லீக்கு அதிக ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அவர்களில் சல்மான்கானும் ஒருவர் என செய்திகள் வெளியாகின. ஆனால், அவரோ ஏஆர் முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்தில் கமிட்டானார். அதனை முடித்துவிட்டு அட்லீ இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சல்மான் கான்.
அதன்படி கமல்ஹாசன், சல்மான் கான் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை பிரம்மாண்டமாக இயக்க முடிவு செய்துள்ளாராம் அட்லீ. சுமார் 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக இது உருவாகவுள்ளதாம். கல்கி 2ம் பாகம் ஷூட்டிங் முடிந்ததும் அட்லீ படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளாராம் கமல். அதேபோல், சல்மான் கானும் சிக்கந்தர் படப்பிடிப்பு முடிந்ததும் அட்லீயுடன் இணைய ரெடியாகிவிட்டாராம்.
தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த காட்ஃபாதர் படத்தில், சல்மான் கான் கேமியோவாக என்ட்ரி கொடுத்திருந்தார். இதுதான் சல்மான்கானின் முதல் தென்னிந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் முதன்முறையாக தமிழில் அறிமுகமாகவுள்ள சல்மான் கான், தொடர்ந்து கோலிவுட் இயக்குநர்களுடன் பணியாற்ற முடிவு செய்துள்ளாராம். அதேநேரம் விஜய் – ஷாருக்கானை ஒரே படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்ட அட்லீ, அவர்களுக்காக எழுதிய கதையை தான் கமல், சல்மான் கான் ஆகியோருக்காக மாற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?