Chiyaan Vikram: வயநாடு நிலச்சரிவு... கேரள அரசுக்கு நிதியுதவி... அள்ளிக்கொடுத்த சீயான் விக்ரம்!

Actor Chiyaan Vikram Donate to Wayanad Disaster in Kerala : கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக, இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியுதவியாக, சீயான் விக்ரம் 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

Jul 31, 2024 - 17:30
Aug 1, 2024 - 15:22
 0
Chiyaan Vikram: வயநாடு நிலச்சரிவு... கேரள அரசுக்கு நிதியுதவி... அள்ளிக்கொடுத்த சீயான் விக்ரம்!
வயநாடு நிலச்சரிவு - விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி

Actor Chiyaan Vikram Donate to Wayanad Disaster in Kerala : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்த கொடுந்துயரத்தில் சிக்கினர். வீடுகள் உட்பட பல கட்டங்களும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர், ராணுவத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் மீட்புப் பணியை தொடங்கினர். இதுவரை கிடைத்த தகவல்களின் படி, வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. 

வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் அனைத்துவிதமான போக்குவரத்தும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, மோசமான வானிலை காணப்படுவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதிலும் சவால்கள் உள்ளன. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியதாக இரு தமிழர்கள் உள்பட 200 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களையும் ராணுவத்தினர் உயிருடன் மீட்டுள்ளனர். மண்ணைத் தோண்ட தோண்ட சடலங்கள் வெளிவருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மாநில - தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இந்திய ராணுவமும் 2ம் நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. 

அதேபோல் வயநாடு நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தம், கடும் தலைவலியில் அவதியுறுவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வயநாடு நிலச்சரிவு காரணமாக கேரளாவில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. நாளை காலை முதலமைச்சர் பினராயி விஜயன் வயநாடு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவுள்ளார். அதன்பின்னர் மீட்புப் பணிகளை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே தமிழக அரசு சார்பில் கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. அதேபோல், பல்வேறு பிரபலங்களும் கேரளாவுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணமாக, சீயான் விக்ரம் 20 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சீயான் விக்ரம் 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது அவரது ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது. முன்னதாக 2018ம் ஆண்டு கேரளாவில் பெய்த கனமழையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அப்போது 35 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தார் சீயான் விக்ரம்.   

அதேபோல், 2015ம் ஆண்டு சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக, கடும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது தமிழக அரசுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியிருந்தார் சீயான் விக்ரம். பேரிடர் காலங்களில் இரங்கல் தெரிவிப்பதோடு நிதியுதவி செய்வதிலும் சீயான் விக்ரம் முன்மாதிரியாக உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow