Home Minister Amit Shah About Wayanad Landslides : கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு இடைவிடாமல் பெய்த மழை காரணமாக வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடியிருப்புகள், அங்கு இருந்த பள்ளிகள் என ஒரு கிராமமே முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தது.
நிலச்சரிவில் சிக்கியும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் 160க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் ஆகியோர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு தோண்டத் தோண்ட மக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி முழுவதும் மக்களின் அழுகுரல்களாக கேட்கின்றன. கேரளாவில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு பிறகு மிகப்பெரும் பேரிடராக நிலச்சரிவு அமைந்துள்ளது. தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் வயநாடு நிலச்சரிவு சம்பவம் எதிரொலித்து வருகிறது.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள எம்.பி.க்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதேபோல் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, ''நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பேசி இருந்தார்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாநிலங்களவையில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''கேரளாவில் கனமழை பெய்யும் என்று மத்திய அரசு சார்பில் 6 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மழை, வெள்ளம், வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகள் குறித்தும் இயற்கை பேரிடர் முன்எச்சரிக்கை அமைப்பு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
கேரளாவில் பேரிடர் ஏற்படும் என்று 1 வாரத்துக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மேலும் 9 குழுக்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இயற்கை பேரிடர் தொடர்பாக மத்திய அரசு விடுக்கும் முன் எச்சரிக்கையை மாநில அரசு தயவு செய்து படித்து பார்க்க வேண்டும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு மலை போல் நின்று வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்து வருகிறது. வயநாடு நிலவரம் குறித்து பிரதமர் மோடி என்னிடமும், கேரள முதல்வரிடமும் பேசினார். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 24 மணி நேர கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.