Namakkal School Student Issue : நாமக்கல் அரசுப் பள்ளியில் மாணவர் உயிரிழந்த விவகாரம்... கல்வி அலுவலர் 2 மணி நேரம் விசாரணை!

Namakkal School Student Issue : நாமக்கல்லில் அரசுப் பள்ளியில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 24, 2024 - 13:36
Aug 24, 2024 - 14:46
 0
Namakkal School Student Issue : நாமக்கல் அரசுப் பள்ளியில் மாணவர் உயிரிழந்த விவகாரம்... கல்வி அலுவலர் 2 மணி நேரம் விசாரணை!
நாமக்கல்லில் மாணவர்கள் இடையே நடந்த மோதலில் ஒருவர் உயிரிழப்பு

Namakkal School Student Issue : நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள வரகூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்தார். வகுப்பறை உள்ளேயே நடந்த இந்தச் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக மாணவர்கள் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் இடையே சாதி ரீதியாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன. 

அதேபோல், போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதும் மாணவர்களிடையேயான மோதல்களுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டத்தில் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. மேலும், நாங்குநேரி அருகே கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படித்த 2 மாணவர்கள் இடையே தண்ணீர் சிந்தியதாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாணவர், இன்னொரு மாணவரை அவரது வீடு புகுந்து அரிவாளால் வெட்டினார். அப்போது அந்த மாணவனின் தங்கையையும் அரிவாளால் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சாதிய ரீதியான தாக்குதலாகவும் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இடையே இதுபோன்ற தகராறுகள் அதிகரித்து வந்த நிலையில், இப்போது நாமக்கல்லில் நடைபெற்றுள்ள சம்பவம் கொலையில் போய் முடிந்துள்ளது. நவலப்பட்டியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவர் வரகூர் அரசுப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை அவருக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாகவும், அதில், ஆகாஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.  

இதுகுறித்து சக மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களிடம் கூற, ஆகாஷை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு ஆகாஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த எருமப்பட்டி காவல்துறையினர் வரகூர் அரசுப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். 

இதன் தொடர்ச்சியாக இன்று வரகூர் அரசுப் பள்ளிக்குச் சென்ற மாவட்ட அலுவலர் விஜயன், சக மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் சுமார் இரண்டு மணி நேரமாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணை முழுவதுமாக முடிந்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவரின் உடலை பார்ப்பதற்காக அவரது பெற்றோரும் உறவினர்களும் பிரேத பரிசோதனை வளாகத்திலேயே காத்திருக்கின்றனர். மாணவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சின்ன சின்ன காரணங்களுக்காக மாணவர்களுக்கு இடையே இப்படியாக மோதல்கள் உருவாவது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதை அரசும் பள்ளிக்கல்வித் துறையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாணவர்களின் எதிர்காலமே கல்வி தான், ஆனால் அவர்களுக்கு சரியான புரிதல்கள் இல்லாமல் இப்படி மோதல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். பள்ளிகளில் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், சமூக பொறுப்புணர்வையும் மனிதநேயத்தையும் மாணவர்களுக்கு போதிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow