தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chennai Meteorological Centre : தமிழகத்தில் கடுமையாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அனைவருக்கும் இனிய செய்தி ஒன்றை கொண்டுவந்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இன்று முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை மழை பொழியும் என்பதே அந்த இனிப்பான செய்தி.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் ஆகஸ்ட் 25ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 30ம் தேதியன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னயை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஆகஸ்ட் 24 முதல் 26ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 27 மற்றும் 28ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க: 2001 அரியர் பாய்ஸ்.. அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த சூப்பர் ஆஃபர்.. மிஸ் பண்ணாதீங்க
தமிழகத்தின் வானிலை சற்றே மாற்றம்பெறப்போகிறது என்பதால், அடுத்த 6 நாட்களுக்கு வெளியே செல்லும் மக்கள் தங்கள் குடைகளை எடுத்து செல்ல மறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.