Actor Soori Movie Kottukkaali Box Office Collection Day 1 : சூரி, அன்னா பென் நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றது கொட்டுக்காளி. அதேபோல், கமல்ஹாசன், இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட தமிழ்த் திரை பிரபலங்களும் கொட்டுக்காளி படத்தை பாராட்டியிருந்தனர். இதனால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
மதுரை அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் ஒரேநாளில் நடக்கும் கதையாக கொட்டுக்காளி உருவாகியுள்ளது. அன்னா பென்னுக்கு பேய் பிடித்துள்ளதாக நம்பும் குடும்பத்தினர், அவரை பேய் ஓட்ட சாமியாரிடம் கூட்டிச் செல்கின்றனர். கூடவே அன்னா பென்னை திருமணம் செய்யவுள்ள சூரியும் செல்ல, அப்போது நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கொட்டுக்காளி படத்தின் கதை. இன்னும் சொல்லப்போனால் கொட்டுக்காளி படத்தின் மொத்த கதையையும், ஷேர் ஆட்டோவில் சுமக்க வைத்து விஷுவலாக கதை கூறியுள்ளார் இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ்.
அதேபோல், படம் முழுக்க பின்னணி இசையே இல்லாமல் லைவ் ஆடியோ, சவுண்ட் எபெக்ட்ஸ் வைத்து ரியலிஸ்ட்டிக்காக எடிட் செய்துள்ளனர். இந்த காட்சி அனுபவம் தான் கொட்டுக்காளி படத்தின் ஸ்பெஷல் என ரசிகர்கள் கூறியுள்ளனர். அதேபோல், சூரி, அன்னா பென் இருவரும் நடிப்பில் செமயாக ஸ்கோர் செய்துள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். சூரி, அன்னா பென் தவிர கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ள அனைவரும் இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ்ஜின் சொந்த ஊர்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொட்டுக்காளி படத்தின் கிளைமேக்ஸில் வரும் டிவிஸ்ட்டும் ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ள கொட்டுக்காளி, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கொஞ்சம் தடுமாறியுள்ளதாகவே தெரிகிறது. அதாவது கொட்டுக்காளி திரைப்படம் முதல் நாளில் 50 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் முதல் நாளில் 1.5 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது. கொட்டுக்காளியை விடவும் வாழை படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க - சூரியின் கொட்டுக்காளி டிவிட்டர் விமர்சனம்
இதனால் நேற்று இரவு முதலே வாழை படத்துக்கு ஸ்க்ரீன்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவும் கொட்டுக்காளி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறைய காரணம் என சொல்லப்படுகிறது. முன்னதாக கொட்டுக்காளி பட விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், ”இந்தப் படம் லாபமாக அமைந்தால், அதை அப்படியே எடுத்து இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ்ஜிடம் கொடுத்துவிடுவேன். அதில் அவர் நினைத்தபடி இன்னொரு படம் எடுக்கலாம்” எனக் கூறியிருந்தார். அதேபோல், கொடுக்காளி பட்ஜெட்டும் 5 முதல் 6 கோடி ரூபாய் வரை தான் என சொல்லப்படுகிறது. இதனால் கொட்டுக்காளி சிவகார்த்திகேயனுக்கு லாபம் கொடுக்குமா, மீண்டும் அவரது தயாரிப்பில் பிஎஸ் வினோத்ராஜ் படம் இயக்குவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.