சவுக்கு சங்கர் மீண்டும் கைது... போலீசார் விசாரணை..!
கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை மீண்டும் போலீசார் கைது செய்துள்ளனர்
கஞ்சா வழக்கில் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் மீண்டும் அவரை தேனி போலீசார் சென்னை தேனாம்பேட்டையில் வைத்து கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது அவரது கார் மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்டோரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக ஆஜராகாதது குறித்து அவரது வழக்கறிஞர் மனு அளித்தார். அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி செங்கமலச்செல்வன் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கின் விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். மேலும் இது குறித்து தேனி பழனி செட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த போலீசாருக்கு விரைந்து வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வந்ததும் சவுக்கு சங்கரை தேனாம்பேட்டை போலீசார் ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது.
What's Your Reaction?