ஆட்டம் காட்டக் காத்திருக்கும் கனமழை... சென்னை மக்களே உஷார்!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 340 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாளை காலை வடதமிழ்நாடு புதுச்சேரி கடற்கரையை ஒட்டி காரைக்கால் மாமல்லபுரம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது.
இதன்காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
தரைக்காற்று எச்சரிக்கை:
29-11-2024 மாலை வரை: வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29-11-2024 மாலை முதல் 30-11-2024 மதியம் வரை: வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான பெய்யக்கூடும். வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கனமழை – மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
What's Your Reaction?