ஃபாஸ்ட் ஃபுட் கடை முதலாளி காரில் கடத்தல்.. போலீஸ் தேடியதும் பஸ்ஸில் அனுப்பி வைத்த மர்ம கும்பல்
ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளரை காரில் கடத்திய மர்ம கும்பல், போலீசார் தேடுவதை அறிந்த மர்ம கும்பல் பஸ்ஸில் ஏற்றி ஊருக்கு அனுப்பி உள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் அரசினர் திருமகள் ஆலை கலைக்கல்லூரி அருகில் டேவிட் சுகுமார் (50) என்பவர் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வருகிறார். இவர் பாஜகவில் உறுப்பினராக உள்ளார். இதனிடையே கடை விடுமுறை என்பதால் தனது கடையில் வேலை பார்க்கும் சரவணன் என்பவரிடம் காந்திநகர் விநாயகர் கோவில் அருகே நேற்று மாலை பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஷிப்ட் காரில் சென்ற மர்ம நபர்கள் டேவிட் சுகுமாரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றுக்கொண்டு கடத்தி சென்றுள்ளனர். குறிப்பாக காரில் சென்றவர்கள் மாஸ்க் அணிந்துகொண்டு சென்றுள்ளனர். டேவிட் சுகுமார் காரில் கடத்தப்பட்டது குறித்து, குடும்பத்தாருக்கு சரவணன் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து டேவிட் சுகுமாரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் கடத்தல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வந்தனர். ஃபாஸ்ட் ஃபுட் உணவ உரிமையாளர் டேவிட் சுகுமாரை காரில் கடத்திய நிலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதை அறிந்த மர்ம கும்பல் நேற்று இரவு டேவிட் சுகுமாரை திருவண்ணாமலையில் இருந்து, வேலூருக்கு செல்லும் பஸ்ஸுல் ஏற்றி அனுப்பி உள்ளனர். இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து, டேவிட் சுகுமார் குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ள்ளார்.
இதனையடுத்து, வேலூர் பேருந்து நிலையத்தில் டேவிட் சுகுமாரை குடியாத்தம் நகர போலீசார் மீட்டனர். மேலும் டேவிட் சுகுமாரிடம் கடத்தல் கும்பல் குறித்து குடியாத்தம் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?