2,250 பேர் ஒரு மார்க் கூட வாங்கவில்லை; பூஜ்யத்துக்கு கீழ் 9,400 பேர் - அதிர்ச்சி தகவல்
NEET UG Exam 2024 : நீட் தோ்வு எழுதிய 2,250க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒரு மதிப்பெண்கூட பெறவில்லை என்றும் 9,400-க்கும் அதிகமான மாணவா்கள் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

NEET UG Exam 2024 : இந்த ஆண்டு, இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, கடந்த மே 5-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.
இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றிருந்தனர். அதிலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த விவகாரங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் மாணவர்களின் பெயர்களையும், எண்களையும் மறைத்து மையங்கள் வாரியான நீட் முடிவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு பிறப்பித்தது. தவிர, நகரங்கள் வாரியாக, தேர்வு மையங்கள் வாரியாக, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழகத்தில், 4879 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 120 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றனர். 600 மதிப்பெண்களுக்கு அதிகமாக சென்னையில் 1035 மாணவர்களும், அதற்கு அடுத்த இடத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் 784 மாணவர்களும், அதற்கு அடுத்த இடத்தில் கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மையங்களில் 289 மாணவர்கள் என 4879 மாணவர்கள் 600க்கும் அதிகமாக மதிப்பெண்கள். பெற்றனர்.
அதேபோல் 700 மதிப்பெண்களுக்கு அதிகமாக தமிழகத்தில் சென்னை மற்றும் நாமக்கல்லில் 32 மாணவர்களும், கோவையில் 9 மாணவர்களும் என இந்த மூன்று மாவட்டங்கள் 700 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. அதேபோல சேலம், தர்மபுரி, கடலூர் நெல்லை, திருச்சி, கரூர், தஞ்சை, வேலூர், விழுப்புரம் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் 700க்கும் அதிகமாக மதிப்பெண்களை நீட் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதிலும் நீட் தோ்வு எழுதிய மாணவர்களில் 2,250க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒரு மதிப்பெண்கூட பெறவில்லை என்றும் 9,400-க்கும் அதிகமான மாணவா்கள் நெகடிவ் மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிஹாரில் நீட் தோ்வு எழுதிய மாணவா் ஒருவா் 180 நெகட்டிவ் மதிப்பெண்கள் [-180] பெற்றுள்ளாா். நீட் நுழைவுத் தேர்வில் இதுவே மிகக் குறைந்த மதிப்பெண்ணாக கருதப்படுகிறது.
What's Your Reaction?






