நீட் தேர்வை ஏன் ரத்து செய்ய வேண்டும்? - நீதிமன்றத்தில் பரபரப்பு விவாதம்

NEET UG Exam 2024 : நீட் தேர்வு 2024 முறைகேடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை வந்தது.

Jul 18, 2024 - 17:23
Jul 19, 2024 - 10:03
 0
நீட் தேர்வை ஏன் ரத்து செய்ய வேண்டும்? - நீதிமன்றத்தில் பரபரப்பு விவாதம்
நீட் தேர்வு முறைகேடு குறித்து நீதிமன்றத்தில் விசாரணை

NEET Exam: 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில், நகரங்கள் வாரியாக, தேர்வு மையங்கள் வாரியாக, நீட் தேர்வு முடிவுகளை நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் வெளியிடப்பட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, கடந்த மே 5-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.

இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றிருந்தனர். அதிலும், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீட் வினாத்தாள் கசிவு குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக நடைபெற்ற விவாவதங்கள் பின்வருமாறு:-

தலைமை நீதிபதி:-

வினாத்தாள் கசிவு என்பது ஒட்டுமொத்த தேர்வையும் எந்த வகையில் பாதித்தது? ஏன் இந்த தேர்வை முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்? என்ற விரிவான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

மனுதாரர்கள் தரப்பு:-

நீட் தேர்வு வழக்கு, ஒட்டுமொத்த நபர்களுக்கும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர இருக்கிறார்கள் அவர்களுக்கு மட்டும் மறுத்தேர்வு நடத்தினால் போதும் என்று தான் கேட்கிறோம்.

தலைமை நீதிபதி:-

வாதத்தை ஏற்க தலைமை நீதிபதி மறுப்பு மறு தேர்வு என்பதை நடத்த உத்தரவிட முடியாது. ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்ற உறுதியான தகவல் கிடைத்த பிறகுதான் அதை செய்ய முடியும்.

நீதிபதிகள்:-

மனுத் தாக்கல் செய்துள்ள மாணவர்களில் எவ்வளவு பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள்? மனுதாரர்களின் குறைந்தபட்ச மதிப்பெண்கள் என்ன? இந்த 1,08,000 மாணவர்களில் எவ்வளவு பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்?

சொலிசிட்டர் ஜெனரல் :-

131 மாணவர்கள் மறுதேர்வு கோரியுள்ளனர்.

மனுதாரர்கள் தரப்பு :-

ஐ.ஐ.டி. மெட்ராஸ் தரவுகள் ஏற்புடையதாக இல்லை. ஐஐடி மெட்ராஸின் இயக்குனர் தேசிய தேர்வுகள் முகமையின் ஆட்சி மன்ற உறுப்பினராக இருப்பதால் அவரது பங்களிப்பு சந்தேகத்திற்குரியது. எனவே ஐஐடி மெட்ராஸின் அறிக்கையை ஏற்ககூடாது.

நீதிபதிகள்:-

ஐ.ஐ.டி மெட்ராஸில் இருந்து யாராவது என்.டி.ஏவில் அங்கம் வகிக்கிறார்களா? அப்படியெனில் இது என்.டி.ஏ.வின் அறிக்கைதானா?

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்:-

இந்த ஆண்டு ஜே.இ.இ தேர்வை ஐ.ஐ.டி மெட்ராஸ் நடத்துவதில் அதன் தலைவர் தேசிய தேர்வுகள் முகமையின் குழுவில் இடம் பெற்று இருப்பார். ஆனால் நீட் தேர்வு தொடர்பான அறிக்கையை தயார் செய்த இயக்குனர் குழுவில் இடம் பெறவில்லை. ஐ.ஐ.டி மெட்ராஸ் கொடுத்த அறிக்கை ஒருதலை பட்சமானது என்ற கேள்விக்கு என்ன இடமில்லை.

மனுதாரர்கள் தரப்பில் வாதம்:-

நீட் தேர்வு வழக்கு, பாடத்திட்டங்கள் குறைப்பு என்ற விஷயத்தை மட்டும்தான் மத்திய அரசு தரப்பும், தேசிய தேர்வுகள் முகமையும் கூறி இருக்கிறார்கள். ஆனால் சில பாடங்களில் பாடத்திட்டங்கள் அதிகரிக்கவும் செய்யப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டார்கள். அதன்படி பார்த்தால் தவறான வகையில் அதிக மதிப்பெண்கள் கொடுத்ததை நீட் வினாத்தாள் கசிந்ததை என அனைத்தும் மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது.

மனுதாரர்கள் தரப்பு:-

நீட் தேர்வில் முதல் 10 இடங்களில் பிடித்தவர்களில் 9 பேர் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதை சுட்டிக்காட்ட ஐ.ஐ.டி மெட்ராஸ் தவறிவிட்டது.

நீதிபதிகள்:-

நகரங்கள் வாரியிலான பட்டியலை எடுத்துக் கொண்டால், எந்தெந்த நகரங்களில் உள்ளவர்கள் முன்னிலையில் பெற்றுள்ளனர் ?

மனுதாரர்கள் தரப்பு :-

நகரங்கள் வாரியான பட்டியலில் பீஹாரில் 7, ஹரியானாவில் 4, குஜராத்தில் 6 பேர் உள்ளனர். ஜெய்ப்பூரில் இருந்து இடம்பெற்றுள்ள 8 பேர் ஐ.ஐ.டி.யின் அறிக்கையில் (Bell Curve) இடம்பெறவில்லை. ஆனால் அதை விட குறைந்த மதிப்பை அறிக்கை காட்டுகிறது.

ஹரியானாவில் உள்ள பஹ்தூர்கட் மையத்தில், கனரா வங்கி மற்றும் ஸ்டேட் வங்கி ஆகிய இரண்டிலிருந்து வினாத்தாள் பெற்று மாணவர்களுக்கு வழங்க வந்துள்ளனர். அதில் கனரா வங்கி வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியுள்ளது.

இவ்வாறுதான் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளதால் எதனால் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என்பதை யாரும் கேள்வி கேட்கவில்லை. அந்த 1563 மாணவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டனர். அமைப்பு பாதிப்படைந்துள்ளது என்பதற்கு பஹதூர்கட் ஒரு சிறந்த உதாரணம்.

ஹரியானாவின் பகதூர் காட் நகரில் உள்ள ஹர்தையால் பள்ளிக்கூடத்தின் தாளாளர் தங்கள் பள்ளிக்கு கனரா வங்கியில் வினாத்தாள் கிடைத்தது என்று கூறியிருக்கிறார். இந்த பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிய அத்தனை பேருக்கும் கருணை மதிப்பெண்கள் என்பது வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மறு தேர்வு எழுதியவர்களில் 6 பேர் 100% மதிப்பெண்களையும், 2 பேர் 718, 719 மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறார்கள். இது எப்படி முறைகேடில்லாமல் வேறு என்னவாக இருக்கும் ?

தேசிய தேர்வுகள் முகமை வாதம்:-

நீட் தேர்வில் முதல் 100 இடம் பிடித்த மாணவர்களின் ஆந்திரா, பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் 7 பேர்; ஹரியானாவை சேர்ந்தவர்கள் 4 பேர்; டெல்லியை சேர்ந்தவர்கள் 3 பேர்; கர்நாடகாவை சேர்ந்தவர்கள் 6 பேர்; கேரளாவை சேர்ந்தவர்கள் 5 பேர்; மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் 5 பேர்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 8 பேர்; உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 6 பேர்; மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் 5 பேர்.

மேலும் நாடு முழுவதிலும் உள்ள 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 56 நகரங்களில் உள்ள 95 மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தான் முதல் 100 இடங்களை பிடித்து இருக்கிறார்கள். இதன்படி பார்த்தால் நாடு முழுவதிலும் சரியான முறையில் நீட் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி நடந்துள்ளது.

சொலிசிட்டர் ஜெனரல்:-

15094 மாணவர்கள் வழங்கப்பட்ட கால அவகாசத்தில் புதியதாக  தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அதில் 44 மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெறுவர். அதில், 12000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் நீட் கட்டணம் குறித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் நகலை நீதிபதிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

கட்டணம் செலுத்த முடியாத ஒரு மாணவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போது, கூடுதலாக 15,000 பேரை விண்ணப்பிக்க அனுமதி அளித்ததை தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது.

மனுதாரர் தரப்பு:-

550ல் இருந்து 720 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 77,000 மாணவர்கள் இந்த வரம்பிற்குள் உள்ளனர். கடந்த ஆண்டுகளைக் கருத்தில் கொள்ளும் போது, உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்கு வரை உயர்ந்துள்ளது.

தலைமை நீதிபதி:-

2022ம் ஆண்டு எத்தனை மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர்?

மனுதாரர் தரப்பு:-

17 லட்சத்து 54க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர், 2023ல் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், 2024ல் 23 லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதினர். பாடத்திட்ட அதிகரித்துள்ளது என்பதை தேசிய தேர்வு முகமை உறுதிபடுத்தியுள்ளது. ஆனால் அதுகுறித்து அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை.

தேர்வுக்கு 5 மாதங்களுக்கு முன்னர் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பிரிவுகளில் பாடத்திட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் தேசிய தேர்வு முகமை எதுவும் கூறவில்லை. 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை  அதிகபட்சமாக 13 சதவீதம் வரைதான் வருடாந்திர அதிகரிப்பு என்பது இருந்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டு அந்த சதவீதம் 33% ஆக உள்ளது.

மனுதாரர்கள் தரப்பு :-
 
வினாத்தாள்கள் தனியார் கொரியர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சொலிசிட்டர்:-

நீட் வினாத்தாளுக்கு 7 கட்ட பாதுகாப்பு உள்ளது. 7 கட்ட பாதுகாப்புடன் கேள்வித்தாள் அனுப்பப்பட்டது. அது குறித்தும் சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

மனுதாரர்கள் தரப்பு :-

சில இடங்களில் நீட் வினாத்தாள் உள்ளிட்ட ஆவணங்களை இ-ரிக்ஷாக்களின் எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

சொலிடிட்டர் ஜெனரல்:-

அவை வினாத்தாள்கள் கிடையாது ஓ.எம்.ஆர் சீட்டுகள் மட்டுமே.

மனுதாரர்கள் தரப்பு:-

பீகார் மாநில காவல் துறையின் விசாரணையின்படி நிறைய மாணவர்கள் மே 5ம் தேதி காலையிலேயே நீட் வினாத்தாள் உள்ள வினாக்களை மனப்பாடம் செய்து முடித்திருக்கிறார்கள். அப்படி என்றால் வினாத்தாள் மே 4ஆம் தேதியே கசிந்திருக்கிறது.

நீட் வினாதாள் தனியார் கொரியர் நிறுவனம் மூலம் சம்மந்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. நீட் வினாதாள்கள் வங்கி கட்டுப்பாட்டில் இருந்தபோது கசியவில்லை என்றால், அது தேர்வு மையத்திலிருந்து கசிந்திருக்க வேண்டும் அல்லது அதன் முன்னர் கசிந்திருக்க வேண்டும்

நீதிபதிகள்:-

வினா தாள்கள் மே 5ம் தேதி காலை கசிந்திருந்தால், அதற்கு முன்னரே அந்த வினாத்தாளில் உள்ளவற்றுக்கு விடை கண்டாகிவிட்டது என்றுதானே கூற முடியும். அப்படியெனில் மே 4ம் தேதி இரவு வெளியாகியுள்ளது. எப்போது வினா தாள் வெளியாகியது என்பதுதான் விடை காணவேண்டிய விவகாரம்.

குறிப்பாக இந்த வினா தாள்கள் வங்கிக்கு வரும் முன்னரே கசிந்திருக்க வேண்டும் அல்லது வங்கியிலிருந்து எடுத்து செல்லும்போது கசிந்திருக்க வேண்டும் என்ற இரண்டு வழிகளே உள்ளன. வினாத்தாள்கள் மூன்று நாட்களுக்கு முன்பாகவே கசிந்திருக்கிறது என்றால் நிச்சயமாக அது பேராபத்து. மேலும், வினாத்தாள்களை அனுப்ப தனியார் கொரியர் நிறுவனத்தை தேசிய தேர்வுகள் முகமை தேர்ந்தெடுத்தது ஏன்? மேலும் வினாதாள் கசிவு எங்கு, எப்படி ஏற்பட்டது?

சொலிசிட்டர் ஜெனரல் :-

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தி, அதன் முடிவில் வினாதாள்கள் tampering செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் மையத்துக்குள் இரவு சிலர் சென்ற சி.சி.டி.வி விடியோ பதிவு உள்ளது.

தலைமை நீதிபதி:-

45 நிமிடங்களுக்குள் கசிவு ஏற்பட்டது என்பது என்.டி. ஏ.வின் கருத்தாக உள்ளது.. முழு வினாத்தாளும் ஒரு மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது என்பது எளிதில் ஏற்புடையதாக இல்லை. வினாத்தாள் தீர்வு கண்டவர்கள் கைது செய்யப்பட்டார்களா? 

சொலிசிட்டர் ஜெனரல்:-

விடை காண்பதற்காக 7 பேர் இருந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் 25 கேள்விகள் வழங்கப்பட்டுள்ளன.

தலைமை நீதிபதி:-

இது மிகவும் வருத்தமளிக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்னர் வினாத்தாள் கசிந்தது என்றால் அது மிகப் பெரிய தாக்கம்  ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் நான்கு மணி நேரத்திற்கு முன்னர் வழங்கப்படும் வினாத்தாளுக்கு 75 லட்சம் வரை வழங்க தயாராக உள்ளார்களா?

நீதிபதிகள்:-

ஹசாரிபாக் மற்றும் ஜார்க்கண்ட் சம்பவங்கள் தவிர வேறு ஏதேனும் சம்பவங்கள் உள்ளதா? 

தலைமை நீதிபதி:-

தீர்வுகானப்பட்ட வினாத்தாள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா?

சொலிசிட்டர் ஜெனரல் :-

வினாத்தாள்களுக்கு தீர்வு கண்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமை நீதிபதி:-

பாட்னா, ஹசாரி பாஹ் உள்ளிட்ட ஒன்றிரண்டு இடங்களில் முறைகேடு நடந்துள்ளது, இதனை மட்டும் அடிப்படையாக கொண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டுமா?

மனுதாரர்கள் தரப்பு:-

மே 5ஆம் தேதி முறைகேடு நடப்பதற்கு ஒரு மாதம் முன்பு காலேஜ் காகா என்ற கவுன்சிலிங் மையம் ஓ.எம்.ஆர் தாள் முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமைக்கு புகார் அனுப்பியுள்ளது. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை கூறுகிறது. அப்படியெனில் இந்த சதிச்செயல்கள் மே 5க்கு ஒரு மாதம் முன்னர் இருந்த நடைபெற்றுள்ளது.

தலைமை நீதிபதி:-

180 கேள்விகளை 45 நிமிடத்தில் விடை கண்டுபிடிக்க முடியுமா?

மனுதாரர்கள் தரப்பு:-

பாட்னா காவல்துறை விசாரணையில் கைது செய்யப்பட்ட நபரின் வாக்குமூலத்தின்படி முந்தின நாள் மாலையே வினாக்களுக்கு விடை கண்டும் மனப்பாடம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவாதங்களின் முடிவில், தலைமை நீதிபதி, பீகார் காவல்துறை கேஸ் டைரியை தாக்கல் செய்யவும், ஹாசாரிபாஹ் மையத்தில் வினாத்தாள் கசிவு உறுதி செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்க மையங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் மாணவர்களின் பெயர்களையும், எண்களையும் மறைத்து மையங்கள் வாரியான நீட் முடிவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

தவிர, நகரங்கள் வாரியாக, தேர்வு மையங்கள் வாரியாக, நீட் தேர்வு முடிவுகளை நாளை மாலை 5 மணிக்குள் வெளியிடப்பட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மையங்கள் வாரியாக முழுமையான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்க தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

தொடர்ந்து, நீட் தேர்வு வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய மதியத்திற்குள் வழக்கின் விசாரணையை நிறைவுசெய்து விடலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கவுன்சிலிங் நடைமுறைகளுக்கு இரண்டு, மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்கின்ற நிலையில், வரும் ஜூலை 24ம் தேதி கவுன்சிலிங் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது குறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாத தலைமை நீதிபதி, திங்கட்கிழமை வழக்கின் விசாரணை நடைபெறும் என்று மட்டும் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow