மெட்ரோ ரயில் சேவை நிலை என்ன?.. எந்தெந்த பகுதிகளில் இருந்து இயக்கம்: விவரம் இதோ
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதனை வெளியேற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாழ்வானப் பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை அதிநவீன நீரிறைக்கும் இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகின்றது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது தமிழக அரசு. மேலும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளதாகவும், அரக்கோணம் கப்பல் படை வீரர்கள், மத்திய கடலோர காவல் படையினரும் படகுகளுடன் தயாராக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: 3 நாட்கள் ஆச்சு.. இபிஎஸ் கால்கள் தரையை தொட்டுள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி
மேலும் மீட்பு பணியின் ஒரு பகுதியாக, நிவாரண மையங்கள், உணவுக் கூடங்கள் ஆகியை அமைக்கப்பட்டு. மக்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கும் பணியையும் கையாண்டது அரசு. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிவாரண முகங்களில் நூறு சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, அனைத்து நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நிவாரண மையங்களிலும் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்னதாக கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில், கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், நாளை முதல் [அக்டோபர் 17] வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம்போல் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும்.
மேலும் படிக்க: வயநாட்டில் போல சென்னையிலும் நடவடிக்கை.. ட்ரோன்களை பறக்கவிட்டு ஒத்திகை
காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களில் இருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களில் இருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும்).
➢ காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை:
➢ பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோரயில்கள் இயக்கப்படும்.
➢ நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
➢ நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல்அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
➢ காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்
➢ இரவு 10 மணி முதல் 11 மணி வரை: பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
What's Your Reaction?