பள்ளிகளில் வாக்குச்சாவடி.. சுத்தம் செய்வது தொடர்பாக நெறிமுறைகள் உள்ளதா? நீதிமன்றம் கேள்வி

வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Nov 15, 2024 - 06:01
 0
பள்ளிகளில் வாக்குச்சாவடி.. சுத்தம் செய்வது தொடர்பாக நெறிமுறைகள் உள்ளதா? நீதிமன்றம் கேள்வி
பள்ளிகளில் வாக்குச்சாவடி.. சுத்தம் செய்வது தொடர்பாக நெறிமுறைகள் உள்ளதா? நீதிமன்றம் கேள்வி

தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும் உள்ளதா என விளக்கம் அளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேர்தல்களின் போது, வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அறிவிப்புகள், வாக்குசாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளி, கல்லூரிகளின் சுவர்களில் ஒட்டப்படுகின்றன.

ஆனால் தேர்தலுக்குப் பிறகு இந்த அறிவிப்புகள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப் படுவது இல்லை எனக் கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில்,  பள்ளிகளின் சுவர்களில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுதந்திரப் போராட்ட தலைவர்கள் மற்றும் தேசத்தலைவர்கள் படங்கள்,   கதைகள், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை தூண்டும் படங்கள் வரையப்பட்டுள்ளன என்றும், வாக்குச்சாவடியில் தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகளை ஓட்டுவதால் பள்ளி சுவர்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளார். 

மேலும் தேர்தல் முடிந்தபின் வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்திய உணவுக் கழிவுகள், உணவுப் பொட்டல கழிவுகள் மற்றும் காகிதப் பொருட்கள் அகற்றப்படுவதில்லை என்றும் பள்ளி திறந்த பிறகு ஆசிரியர்கள் தான் சுத்தப்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

 தேர்தல் முடிந்தபின் வாக்குச்சாவடியை சுத்தம் செய்ய எவ்வித பணமும் ஒதுக்கீடு செய்வதில்லை என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பத்துக்கு பதிலளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், வாக்குச்சாவடிகளில் தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகளை ஒட்டாமல் இருக்க  நடவடிக்கை எடுக்கவும், தேர்தலுக்கு பிறகு வாக்குச் சாவடியை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யவும் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை சுத்தம் செய்து கொடுப்பதற்கு வழிகாட்டி நெறிமுறைகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து டிசம்பர் 12ஆம் தேதி தெரிவிக்கும் படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow