மாவட்ட வளர்ச்சிப் பணிகள்... பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்... முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், இதர பணிகளைக் கண்காணிக்கவும் 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Oct 8, 2024 - 18:20
 0
மாவட்ட வளர்ச்சிப் பணிகள்... பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்... முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், இதர பணிகளைக் கண்காணிக்கவும் 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த் தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி. வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவும், தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தென்காசி மாவட்டத்திற்கு வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணியையும், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, சமீபத்தில் தான் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். அதன்பின்னர் உடனடியாக அவருக்கு மீண்டும் அமைச்சர் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.  

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow