சினிமா

ஆனந்த அதிர்ச்சி... சமூக நீதிக்கான குரல் இன்னும் பெரிதாகட்டும்... ‘நந்தன்’ இயக்குநர் நெகிழ்ச்சி!

’நந்தன்’ படத்தை ஓடிடி தளத்தில் பார்த்து பாராட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமாதாஸுக்கு அப்படத்தின் இயக்குநர் இரா.சரவணன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆனந்த அதிர்ச்சி... சமூக நீதிக்கான குரல் இன்னும் பெரிதாகட்டும்... ‘நந்தன்’ இயக்குநர் நெகிழ்ச்சி!
சமூக நீதிக்கான குரல் இன்னும் பெரிதாகட்டும்... ‘நந்தன்’ இயக்குநர் நெகிழ்ச்சி!

‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கிய அவர், அதன்பின்னர் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். ஹீரோ உட்பட பல கேரக்டர்களில் நடித்துள்ள சசிகுமார் கரியரில், ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே ஹிட் லிஸ்ட்டில் இணைந்தன. அதேநேரம் சசிகுமாருக்கு பெரிதாக நடிக்கத் தெரியவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து நந்தன் படத்தில் கம்பேக் கொடுத்துள்ளார் சசிகுமார். கடந்த சில வாரங்கள் முன்பு வெளியான நந்தன் படத்தில் சசிகுமாரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டியிருந்தனர். 

ஆதிக்க சாதியினரின் ஆதரவோடு பதவிக்கு வரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் ஆடிவைக்கப்படுகிறார்கள், அவர்களது உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்படுகின்றன என்பதுதான் ‘நந்தன்’ திரைப்படத்தின் ஒன் லைன்! சாதிய அரசியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக தனது கெட்டப் தொடங்கி குணாதிசயம் வரை மாற்றியிருக்கிறார் சசிகுமார். பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கதை ஆழமாக இருந்தாலும் லோ பட்ஜெட் மற்றும் படத்துக்கு பெரிதாக புரோமோஷன் இல்லாததால் இப்படியொரு சிறப்பான திரைப்படம் மக்களிடம் சென்றடையாதது மிகவும் வருத்தமளிக்கும் ஒன்று என சினிமா விமர்சகர்கள் தங்களது வேதனைகளை தெரிவித்தனர். இப்படம் கடந்த 12ம் தேதி அமேசான் பிரைமில் (OTT) வெளியானது. 

இந்நிலையில், இப்படத்தை ஓடிடி-யில் பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது X தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதில், “அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் பத்திரிகையாளர் இரா.சரவணன் இயக்கி, நடிகர் சசிகுமார்  நடித்த ‘நந்தன்’ திரைப்படம் பார்த்தேன். உள்ளாட்சிகளின் வாயிலை நந்தன்களுக்கு சட்டம் திறந்து விட்டாலும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் மூடி விடுகின்றனர் என்ற சமூகநீதியின் கருப்பு வரலாற்றைத்தான் ‘நந்தன்’ திரைப்படம் பேசுகிறது. உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கான உரிமைகளை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் ‘நந்தன்’ இயக்குநர் இரா.சரவணன். இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ஆனந்த அதிர்ச்சி... அமேஸான் தளத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 'நந்தன்' படம் பார்த்திருக்கிறார். நேற்றிரவு X தளத்தில் அவருடைய ட்வீட் பார்த்த பிறகுதான் அவர் படம் பார்த்த விஷயமே தெரியும். 'நந்தன்' படத்தைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து, அதுகுறித்து பாராட்டும் தெரிவித்திருக்கும் டாக்டர் அன்புமணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இப்படி கொஞ்சமும் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து தன்னிச்சையாக எழுகிற ஆதரவுதான் நந்தன்' படத்தை இன்றளவும் அமேஸான் தளத்தில் ட்ரெண்டிங்கில் வைத்திருக்கிறது. சமூக நீதிக்கான குரல் இன்னும் பெரிதாகட்டும்...” என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.