கேலி மனிதர்களை தோற்கடித்து திமுகவிற்கு வெற்றியை பரிசளித்தார்கள்.. முதல்வர் பெருமிதம்

பொதுமக்கள் என் மீதும், திமுக மீதும் நம்பிக்கை வைத்து கேலி மனிதர்களை தோற்கடித்து தேர்தலில் வெற்றியை தேடித்தந்தீர்கள் மக்கள் வைத்த கோரிக்கைகளில் சாத்தியமுள்ள அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Jul 11, 2024 - 13:41
Jul 11, 2024 - 14:33
 0
கேலி மனிதர்களை தோற்கடித்து திமுகவிற்கு வெற்றியை பரிசளித்தார்கள்.. முதல்வர் பெருமிதம்
MK Stalin dharmapuri

ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேருவதற்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் முதல்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமலுக்கு வந்தது. அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் நடைபெற்ற விழாவில் இந்த திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டத்தை தொடங்கி வைத்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த திட்டத்தின் மூலம் அரசின் பல்வேறு சேவைகளையும் ஒரே குடையின் கீழ் மிக எளிதாகப் பெற முடியும் என்பதை அவர் குறிப்பிட்டார்.

தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; தேர்தலுக்கு முன்பே பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகளை மனுக்களாக பெற்றோம். பொதுமக்களிடம் தொடர்ந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்களின் கோரிக்கைகள் எந்த இடத்திலும் எங்களது பார்வையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காக முதல்வரின் முகவரி துறை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் என் மீதும், திமுக மீதும் நம்பிக்கை வைத்து கேலி மனிதர்களை தோற்கடித்து தேர்தலில் வெற்றியை தேடித்தந்தீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முதலமைச்சரின் தனிப்பிரிவு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம். மக்கள் கொடுக்கும் எல்லா மனுக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தோம்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று நான் மக்களை சந்தித்தேன். அதற்கு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பெயர் வைத்தேன். கொளத்தூர் தொகுதி மட்டும் இல்லை, எல்லா தொகுதிகளும் என் தொகுதி தான் என மனு வாங்கினேன். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அதை நிறைவேற்றுவேன் என , மேடையிலே பெட்டியை பூட்டி எடுத்து சென்றேன். ஆனால் எதிர்கட்சிகள் ஆட்சிக்கே வரப் போவதில்லை, நிறைவேற்றப் போவதில்லை என கேலி செய்தார்கள்.
ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்தீர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் 2 லட்சத்து 212 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது‌. தேர்தல் முடிந்தவுடன் எங்கள் கடமை முடிந்தது என எண்ணாமல், இனிமேல் தான் கடமை தொடங்குகிறது என நினைத்து வேலை செய்தோம்.

இதில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, மக்களுடன் முதல்வர், முதல்வரின் முகவரி என பலப்பிரிவுகளில் மனுக்களை வாங்கி, தனி அலுவலர் வைத்து நிறைவேற்றி வருகிறோம். எல்லா பிரிவுகளின் கீழ் வாங்கும் மனுக்கள் ஒரு குடையில் கீழ் கொண்டு வரப்படுகிறது. முதல்வரின் முகவரி திட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் 72 ஆயிரம்மனுக்கள் பெறப்பட்டது.

அரூர் அரசு மருத்துவமனை ரூ.51 கோடி மதிப்பில் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும். பஞ்சப்பள்ளி-அலியாளம் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்படும். அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். சிட்லிங், சித்தேரி மலை கிராமமக்களுக்காக சிறு தானிய மதிப்பு கூட்டப்பட்ட தொழில்கள் ஏற்படுத்தப்படும். தீர்த்தமலையில் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும் .

சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் இது தான் திராவிட மாடல் அரசு. எல்லா வீட்டிற்கும் ஏதோ ஒரு வகையில் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என பணியாற்றி வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow