வீட்டு வாசலில் குவிந்த போலீசார்..தமிழிசை உட்பட பாஜகவின் முன்னணி தலைவர்கள் கைது
பாஜக சார்பில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், பாஜகவின் முன்னணி தலைவர்கள் வீட்டின் முன் இன்று காலை முதலே போலீசார் குவிந்து வந்த நிலையில் தமிழிசை கைது செய்யப்பட்டுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து இன்று பாஜக சார்பில் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விருகம்பாக்கத்தில் உள்ள முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் போராட்டத்தில் பங்கேற்காத வகையில் வீட்டு காவலில் வைக்க விருகம்பாக்கம் உதவி காவல் ஆணையர் பாலகிருஷ்ண பிரபு தலைமையில் 3 ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் தமிழிசை வீட்டின் முன் குவிந்தனர்.
கைது செய்யப்பட்ட தமிழிசை:
தகவல் அறிந்த பாஜக தொண்டர்கள் தமிழிசை வீட்டு முன்பு குவிந்து வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்பதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்த தமிழிசையை கைது செய்ய முயன்ற போது, போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும், போராட்டத்தில் பங்கேற்பதில் தமிழிசை உறுதியாக இருந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் நடைபெறவுள்ள முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள முயன்ற மாநில செயலாளர் வினோஜ் செல்வத்தையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமலாக்கத்துறை சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டாஸ்மாக் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நடைப்பெற்ற சோதனையில் ரூ.1000 கோடி-க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்திருந்தது தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பியது. முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய தொடங்கிய போது அதிமுகவினர் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அறிக்கையினை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பும் செய்தனர்.
அமலாக்கத்துறை அறிக்கையின் முக்கிய அம்சம்:
”(டாஸ்மாக்) மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள்/நபர்கள் தொடர்பான இடங்களில் பல்வேறு குற்றங்களுக்காக, (2002 பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ்) 06.03.2025 அன்று, அமலாக்க இயக்குனரகம் (ED) சோதனை நடவடிக்கைகளை நடத்தியது.
ஊழல் தடுப்புச் சட்டம், 1988 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் டாஸ்மாக் மீது பதிவு செய்யப்பட்ட பல குற்றப்பத்திரிக்கைகளின் அடிப்படையில் ED விசாரணையைத் தொடங்கியது. குற்றப்பத்திரிக்கை விவரம்: (i) டாஸ்மாக் கடைகள் உண்மையான MRP விலையை விட அதிகமாக வசூலித்தது; (ii) சப்ளை ஆர்டர்களுக்காக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சில நிறுவனங்கள் சாதகமாக நடந்துக் கொண்டது; (iii) டாஸ்மாக் மூத்த அதிகாரிகள் சில்லறை டாஸ்மாக் கடைகளில் இருந்து லஞ்சம் வசூலிப்பது மற்றும் டாஸ்மாக் ஊழியர்களை இடமாற்றம் செய்தல் மற்றும் பணியமர்த்துவதற்கு பணம் பெறுதல் போன்றவையும் அடங்கும் “ என குறிப்பிட்டு இருந்தது.
Read more: டாஸ்மாக் மூலம் 40,000 கோடி ஊழல்? பட்ஜெட் உரை வெளிநடப்பு குறித்து EPS பேட்டி
What's Your Reaction?






