நள்ளிரவில் பயங்கரம்.. சென்னையில் இரட்டை கொலை..!
சென்னையில் நேற்று நள்ளிரவில் கோயில் வாசலில் படுத்திருந்த இரண்டு ரவுடிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி அருண் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அருண்குமார் (25) மற்றும் அவரது நண்பர் சுரேஷ் (எ) படப்பை சுரேஷ் ஆகியோர் நேற்று இரவு கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்திருந்துள்ளனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று படுத்திருந்த அருண் மற்றும் ரவுடி சுரேஷ் ஆகியோரை அரிவாள் மற்றும் கத்தியை கொண்டு சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அருண் பலத்த காயம் அடைந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில் இரட்டைக்கொலைச் சம்பவத்தை நிகழ்த்தியது அதே பகுதியைச் சேர்ந்த சுக்கு காப்பி சுரேஷ் (25) என்பது தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அருண் என்பவரது காதலி சாயின்ஷாவை, கேளம்பாக்கத்தில் வைத்து ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்தார். இதனால், காதலியின் கொலைக்கு பழிவாங்க அருண், சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் இந்த திட்டமானது ரவுடி சுக்கு காப்பி சுரேஷுக்கு தெரியவந்துள்ளது.
அதனால், அருண் மற்றும் அவரது சகோதரர் அர்ஜூனன் ஆகியோர் தன்னை கொலை செய்வதற்கு முன்பு அருண் மற்றும் அவரது சகோதரர் அர்ஜூனன் ஆகியோரை தாம் முதலில் கொலை செய்ய வேண்டும் என சுக்கு காப்பி சுரேஷ் திட்டுமிட்டு வந்துள்ளார். நேற்று இரவு சுக்கு காபி சுரேஷ் முந்திக்கொண்டு அருண் குமார் மற்றும் அவரது அண்ணன் அர்ஜுனன் ஆகியோரை கொலை செய்ய வந்துள்ளார்.
அங்கு படுத்திருந்த அருண்குமார் மற்றும் அருண்குமார் உடன்படுத்திருந்த ரவுடி படப்பை சுரேஷ் ஆகியோரை சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட எட்டு நபர்கள் கொடூரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆனால், அங்கு அர்ஜுனனுக்கு பதிலாக அருண்குமாரின் நண்பர் ரவுடி படப்பை சுரேஷ் படுத்திருந்ததால் அவர் மீது கொடூத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ரவுடி படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருண்குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோட்டூர்புரம் போலீசார், இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தலைமறைவாக உள்ள கோட்டூர்புரத்தை சேர்ந்த சுரேஷ் (எ) சுக்கு காபி உட்பட எட்டு நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோட்டூர்புரத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவம் சென்னை முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட அருண்குமார் மீது சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்கு உள்ளது. அதேபோன்று ரவுடி படப்பை சுரேஷ் மீது சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும், கொலை செய்த சுக்கு காப்பி சுரேஷ் என்பவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 17 வழக்கு நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தொடரும் இதுபோன்ற கொலை வழக்குகள் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






