கைரேகை ஜோசியம் பார்ப்பதாகக் கூறி ரூ. 15,000 அபேஸ்... இளைஞர்களுக்கு லாடம் கட்டிய போலீஸ்!
சிதம்பரம் அருகே கை ரேகை ஜோசியம் பார்ப்பதாக கூறி 15,000 ரொக்கப் பணத்தை ஆட்டையை போட்ட இளைஞர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அருகே மேலத்திருக்கழிப்பாளை ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி தெருவை சேர்ந்தவர் சாந்தி 45. இவரது வீட்டிற்கு இரண்டு இளைஞர்கள் கைரேகை ஜோசியம் பார்ப்பதாகக் கூறிவிட்டு வீட்டிற்குள் வந்துள்ளனர். அவர்களிடம் சாந்தி கைரேகை காண்பித்தபோது அவரது வீட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகக் கூறி 3000 ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தண்ணீர் எடுத்து வருமாறு சந்தியிடம் அந்த இளைஞர்கள் கூறியுள்ளனர். இதனால் சாந்தி தண்ணீர் எடுக்கச் சென்ற அந்த சைக்கிள் கேப்பில், சாந்தியின் மணிபர்ஸில் இருந்த 15,000 ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு இருவரும் ஓட்டம் பிடித்துள்ளனர். இதன் பின்பு, தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பி வந்து பார்க்கும்போது அந்த இரண்டு இளைஞர்களும் இல்லாததால் சாந்தி அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் அவரது மணி பரிசை பார்த்த போது அதிலிருந்த 15,000 ரொக்க பணமும் இல்லாததை கண்டு அங்கும் இங்கும் தேடி அலைந்து உள்ளார். மேலும் ஜோசியம் பார்ப்பதுபோல் நடித்து தன்னை ஏமாற்றிய இளைஞர்களை அப்பகுதி முழுவதும் சாந்தியும் அவரது உறவினர்களும் தேடி அலைந்துள்ளனர். அப்போது அந்த இளைஞர்களுடன் வந்த மற்ற இரண்டு இளைஞர்கள் வேறு பகுதியில் இருப்பதை உறுதி செய்த சாந்தி, அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் அண்ணாமலை காவல் நிலைய போலீசார் அந்த இளைஞர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில் பயந்துபோன இளைஞர்கள் ஜோசியம் பார்ப்பதுபோல் நடித்து பணத்தை திருடிய இளைஞர்கள் குறித்த தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதில், திருவாரூர் மாவட்டம் மருதபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் 32 மற்றும் விக்னேஷ் 22 ஆகிய இருவர்தான் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், பதுங்கியிருந்த இருவரையும் லாவகமாகப் பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் இருவரும் திருடியதை ஒப்புக்கொண்டதோடு திருடிய பணத்தையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து இருவரையும் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை ஜோசியம் பார்ப்பதாகk கூறி கிராம பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இந்த இளைஞர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?