Air Show Tragedy : வான் சாகச நிகழ்ச்சி... யாரும் அரசியலாக்க வேண்டாம்... அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம்!
Ma Subramanian About Air Show Tragedy : சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 93 பேர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.
Ma Subramanian About Air Show Tragedy : இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மெய் சிலிர்க்க வைத்த இந்த விமான சாகச நிகழ்ச்சியை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்ததாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரினாவில் குவியத் தொடங்கினர். இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது. அதேபோல் விமான சாகச நிகழ்ச்சி முடிந்த பின்னரும், பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்.
சேப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும், மெட்ரோல் ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மின்சார ரயில்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்ததாக தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், 93 பேர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். வெயிலின் தாக்கம், கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். அதேநேரம் அரசு சார்பில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து திமுக அரசு முறையான பாதுகாப்பை கொடுக்க தவறியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இந்த அசம்பாவிதம், திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை காட்டுவதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதேபோல், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திட, தமிழ்நாடு அரசின் நிர்வாக ரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டதாக அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், வான் சாகச நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம், இந்திய விமானப்படை அதிகாரிகள், தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும், பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன. இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள், செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதுதவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும், 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை குடிநீர், கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு, 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு, அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், விமான சாகச நிகழ்ச்சியின் போது 40 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. மேலும் ஆயிரம் பாரா மெடிக்கல் குழுவினர் சுகாதார பணிக்காக தயார்நிலையில் இருந்தனர். 4000க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மருத்துவப் பணிக்காக தயார்நிலையில் இருந்தனர். நேற்று வெயிலின் தாக்கம் மிகவும் கொடூரமாக இருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பொதுமக்கள், குடை, குடிநீர் ஆகியவற்றுடன் வர வேண்டும் என்று விமானப்படை அறிவுறுத்தி இருந்தது. அதேநேரம், கூட்ட நெரிசலில் ஏற்பட்ட 5 பேர்களின் மரணம் மிகவும் வருத்ததிற்குறிய ஒன்று. வெயிலின் தாக்கத்தால் அவர்கள் உயிரிழந்த பின்னர் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தற்பொழுது 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சாகச நிகழ்ச்சிகளையும் தாண்டி விமானப் படையின் பெரிய கட்டமைப்பை மக்கள் பார்த்து மகிழ வேண்டும் என்று விரும்பித்தான் அங்கு வந்துள்ளனர். பூதக்கண்ணாடி போட்டு குற்றம் கண்டுபிடிக்க கூடிய நக்கீரர்கள் ஒன்றிரண்டு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். விமான சாகச நிகழ்சியில் ஏற்பட்ட மரணத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம். மக்களுக்கு தேவையான குடிநீர் தொட்டிகள் தேவையான அளவிற்கு வைக்கப்பட்டிருந்தன, மேலும், 7500 போலீஸார் உட்பட ஊர் காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?