Diwali Special Bus: தீபாவளி சிறப்புப் பேருந்துகள்... பெட்டி, படுக்கையோட ரெடியாகிடுங்க மக்களே..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28 முதல் 30 வரை சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை: வரும் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. 31ம் தேதி வியாழக்கிழமை என்பதால், அதற்கு அடுத்த நாளான நவம்பர் 1ம் தேதியும் பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைக்கும். இதனால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது தீபாவளியை முன்னிட்டு ஒட்டுமொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் என மூன்று மையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்களில் 5.83 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் 28 முதல் 30ம் தேதி வரை, சென்னையில் இருந்து இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து ஒட்டுமொத்தமாக 11,176 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் பிற ஊர்களில் இருந்தும் மேற்கண்ட 3 நாட்களுக்கு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதன்மூலம் வரும் 28 முதல் 30ம் தேதி வரை மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி முடிந்ததும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவர்களின் வசதிக்காகவும் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நவம்பர் 2 முதல் 4 ம் தேதி வரை, சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 9,441 பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. தினமும் 2,092 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக 3,165 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல் மற்ற ஊர்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 3,165 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமானால், தேவைக்கேற்ப தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் எனவும், அதிக கட்டண வசூலை தடுப்பதற்காக தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் 24ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?