Air Show 2024 : தண்ணீர் பிச்சை கேட்கும் நிலை.. கார் ஷோவிற்கு காட்டிய அக்கறை இதற்கு இல்லை - எஸ்.ஜி.சூர்யா தாக்கு
SG Suryah on Air Show 2024 : வான் சாகச நிகழ்வில் கலந்துக்கொண்ட மக்கள் குடி தண்ணீர் பிச்சை கேட்கும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.
SG Suryah on Air Show 2024 : சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை [07-10-24] காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காண பொதுமக்கள் காலை முதலே வர தொடங்கியதால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது.
மக்கள் கூட்டமாக கூடியதால் போக்குவரத்து மற்றும் சாலையில் மக்கள் தேங்கி நிற்கும் நிலையில் இருந்தது. இதனால், பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெயில் தாக்கம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலரும் உள் நோயாளியாகவும், நீர்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரழந்ததற்கு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “உதயநிதி ஸ்டாலின் நடத்திய கோடீஸ்வரர்கள் மட்டுமே கலந்துக்கொண்ட கார் பந்தயத்தை சில ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையில் கண்டு களித்தனர். அதற்கான டிக்கெட் ஆயிரங்களில் இருந்து லட்சங்கள் வரை விற்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு தமிழக அரசின் மொத்த அரச நிர்வாகமும் இரவு, பகல் பாராமல் பணி செய்தனர்.
இந்திய விமானப்படையில் விமான சாகச நிகழ்ச்சி சென்னையில் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிவித்தாகி விட்டது. 15 லட்சம் மக்கள் மெரினா கடற்கரைக்கு இந்நிகழ்வை காண சென்னையில் வந்ததாக கூறப்படுகிறது. இது லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.
ஆனால், 21 ஆண்டு கழித்து சென்னையில் நடைபெற்ற விமான சாகச(Chennai Air Show 2024) நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு மெகா சொதப்பல் புரிந்து உள்ளது கண்கூடாக தெரிகிறது. போதிய போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள், இத்தனை லட்சம் மக்கள் கூடும் இடத்தில் போதிய ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ வசதி, குறைந்தபட்சம் கலந்துக்கொள்பவர்களுக்கு தண்ணீர் வழங்குவது குறித்து கூட இந்த விடியா திராவிட மாடல் அரசு அக்கறைக் கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இன்றைய நிகழ்வில் கலந்துக்கொண்ட மக்கள் குடி தண்ணீர் கிடைக்காமல் அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று தண்ணீர் பிச்சை கேட்கும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது. திடீரென மயக்கம் போட்டு விழுந்தவர்கள். உடல்நல குறைவு ஏற்பட்டவர்களை அவர்களின் உறவினர்கள் கையில் தூக்கிக்கொண்டு ஓடும் காட்சிகளை பார்க்கும் போது நெஞ்சம் பதபதைக்கிறது.
போதாதென்று இப்போது வரை இந்நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செய்திகாக இருக்கிறது. இந்நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது தமிழகத்தில் ஒரு அரசாங்கம் இருக்கிறதா? அது இயங்குகிறதா? என்ற கேள்விகள் எழாமல் இல்லை.
லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிக்கு இந்த அரசு காட்டிய அக்கறையும், உதயநிதியின் கார் ஷோவிற்கு இந்த அரசு காட்டிய அக்கறையும் நீங்கள் ஒப்பீடு செய்து பார்த்தால் இந்த அரசு யாருக்கான அரசு என்பதை புரிந்துக்கொள்ளலாம். அது ஒன்றும் புரியாத புதிர் அல்ல, இந்த அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் குடும்பத்துக்கான அரசே தவிர, 8 கோடி தமிழர்களுக்கான அரசு அல்ல. இப்படிப்பட்ட காட்டாட்சி புரிவதற்கு வெட்கப்படுங்கள் முதல்வரே...” என்று காட்டமாக கூறியுள்ளார்.
What's Your Reaction?