Diwali 2024: நாடு முழுவதும் களைகட்டிய தீபாவளி... குடியரசுத் தலைவர், அரசியல் பிரபலங்கள் வாழ்த்து!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கிய நிலையில், குடியரசுத் தலைவர், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Oct 31, 2024 - 12:45
 0
Diwali 2024: நாடு முழுவதும் களைகட்டிய தீபாவளி... குடியரசுத் தலைவர், அரசியல் பிரபலங்கள் வாழ்த்து!
களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்

சென்னை: நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். மேலும் நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல், புதுமண தம்பதிகள் தங்களது தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளியான இன்று சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் மின்கம்பங்கள், மின்விளக்குகள், வாகனங்களுக்கு அருகே பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், பட்டாசு வெடிக்கும் போது தண்ணீர், மணல் வாளியை அருகில் வைத்துக்கொள்ளவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தீபாவளியின் காரணமாக நேற்று மாலை முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் புகை மூட்டமாக காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர், தமிழ்நாடு ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

தீபாவளி என்பது மகிழ்ச்சி, உற்சாகத்தின் பண்டிகை. அறியாமைக்கு எதிராக அறிவும், தீமைக்கு எதிராக நன்மையும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் விழாவாகும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி பண்டிகை பிரகாசமான எதிர்காலத்துக்கான நம்பிக்கையையும் தூண்டுவதாகவும், மாசு இல்லாமல் இதனை கொண்டாடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளி தீமையின் மீது நன்மை, இருளின் மீது ஒளி, அறியாமையின் மீது ஞானத்தின் வெற்றியின் அடையாளமாகும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களின் இதயங்களில் அளவற்ற அன்பும் உள்ளார்ந்த கருணையையும் ஒளிரச் செய்து, அனைவருக்கும் ஏராளமான மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், செழிப்புடன் சமுதாயத்தில் ஒற்றுமையை வளர்க்கட்டும் எனக் கூறியுள்ளார். 

எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தித்திக்கும் இந்த இனிய திபாவளித் திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளித் திருநாளை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அருமை தமிழக மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும் என்றும், அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும், அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும், தீபஒளித் திருநாளைப் பாதுகாப்பாகக் கொண்டாடி மகிழ்வோம் என கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow