ரூ.2,000 கோடி ரஷ்ய முதலீடு என கூறி மோசடி.. ரெய்டில் சிக்கிய 470 சவரன் தங்கம், 400கிலோ வெள்ளி
ரஷ்ய கலாச்சார மையத்தை பயன்படுத்தி சுமார் 7,32,45,000 ரூபாய் மோசடி செய்த நபரிடம் இருந்து, 470 சவரன் தங்க நகைகள், 400கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட 327 கிலோ ஹெராய்ன், 5 ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்விவகாரத்தில் ஆதிலிங்கம் உள்ளீட்ட 16 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது இதுவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி வழக்கில் அருண்ராஜை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 15ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் கைதான அருண்ராஜ், கூட்டாளிகள் மதன் குமார், ரூபா ஆகிய 3 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்து சென்னை மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதால் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
மின் உற்பத்தி தொடர்பான தொழிலில் ரஷ்ய முதலீடு பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய கும்பலின் தலைவனுக்கும், விழிஞ்சம் கடற்கரையில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கும் தொடர்பு இருப்பதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ரஷ்ய கலாச்சார மையத்தை பயன்படுத்தி சென்னை தொழிலதிபரிடம் சுமார் 7 கோடி 32 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த கும்பல் தலைவன் அருண்ராஜுக்கும், நடிகை ஒருவரிடம் சிறிது காலம் மேலாளராக இருந்த ஆதிலிங்கம் என்பவருக்கும் தொடர்பு என விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இதனால் அருண்ராஜிடம் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்தனர். அருண்ராஜ் மூலமாக மோசடி பணத்தை பெற்று ஆதிலிங்கம், டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அரசியல் கட்சியை தமிழகத்தில் ஆரம்பித்து அதன் மூலமாக பணத்தை சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
சினிமா துறையில் பணியாற்றிக் கொண்டே விடுதலைப் புலிகள் அமைப்பு புத்துணர்ச்சி பெற ஆதிலிங்கம் பணியாற்றி வந்தது தொடர்பாக அருண்ராஜை விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மோசடி மன்னன் அருண்ராஜ், அவரது கூட்டாளிகள் மதன்குமார், ரூபா ஆகிய மூன்று பேரை மட்டும் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார். அருண்ராஜ் முதலீடு பெற்றுத்தருவதாக இதே போல மேலும் 5 பேரிடம் 2.5கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளதால், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவிடம் தகவலை தெரிவித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார்.
ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அருண்ராஜை கூடிய விரைவில் கைது செய்து காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகள் அருண்ராஜிடம் விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். ரூபாவின் ஓ.எம்.ஆர் வீட்டில் சோதனை நடத்தி மோசடி செய்ததற்கான முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
470 சவரன் தங்க நகைகள், 400கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் வங்கி கணக்கில் இருந்த 4 லட்சம் ரூபாயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.
What's Your Reaction?