பாஜக சார்பில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், பாஜகவின் முன்னணி தலைவர்கள் வீட்டின் முன் இன்று காலை முதலே போலீசார் குவிந்து வந்த நிலையில் தமிழிசை, வினோத் பி செல்வம், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சரஸ்வதி போன்றோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டாஸ்மாக் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நடைப்பெற்ற சோதனையில் ரூ.1000 கோடி-க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்திருந்தது தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பியது. டாஸ்மாக் முறைகேட்டினை கண்டித்து இன்று பாஜகவினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் விருகம்பாக்கத்தில் உள்ள முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் போராட்டத்தில் பங்கேற்காத வகையில் வீட்டு காவலில் வைக்க விருகம்பாக்கம் உதவி காவல் ஆணையர் பாலகிருஷ்ண பிரபு தலைமையில் 3 ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் தமிழிசை வீட்டின் முன் குவிந்தனர். இருப்பினும் போராட்டத்தில் பங்கேற்க தமிழிசை முயன்றதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
பாஜக தலைவர் கண்டனம்:
பாஜகவின் முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், ”ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது x வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு திமுக அரசினை கடுமையாக சாடியுள்ளார்.
திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, @BJP4Tamilnadu சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, @BJP4Tamilnadu மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி @DrTamilisai4BJP,… pic.twitter.com/em0UUH5sjF
— K.Annamalai (@annamalai_k) March 17, 2025