விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விருதுநகர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ஊருக்குள் செல்லாமல் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அடைவதற்கு ஏதுவாக ரூ 154 கோடி மதிப்பில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் அருப்புக்கோட்டை நகரின் கிழக்கு பகுதியில் புதிதாக புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு துவங்கிய இந்த சாலை பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாக புகார் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உடன் இணைந்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சாலை அமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது சாலை அமைக்கும் பணியில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் சாலை பணிகள் குறித்தும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கம் அளித்தனர். அப்போது ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைக்க தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலம் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து மார்ச் மாதத்திற்குள் சாலை பணிகளை முழுமையாக முடிப்பதாகவும் அதிகாரிகள் அமைச்சரிடம் கூறினர். அதனைத் தொடர்ந்து ரயில்வே பாலம் அமைய உள்ள இடத்தில் நேரடியாக காரில் சென்று அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளை அமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், “அருப்புக்கோட்டை நகருக்குள் கனரக வாகனங்கள் வராமல் தடுப்பதற்கும், மாணவ மாணவியர்கள் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் அருப்புக்கோட்டை நகரின் மேற்கு பகுதியில் ரூபாய் 154 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரூ 30.5 கோடி நில எடுப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். பணிகள் முடிவடையும் போது அருப்புக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். தேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்களை இந்த புதிய சாலை வழியாக திருப்பி விட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அருப்புக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் தேவர் குருபூஜைக்கு செல்பவர்கள் சந்தோஷமாக செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.
தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து பேசிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கி அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளார். அமைச்சர்களையும் அரசு இயந்திரத்தையும் முடுக்கி விட்டுள்ளார். அனைவரும் களப்பணி ஆற்றி கொண்டிருக்கிறோம். மழையை எதிர்கொள்வதற்கு முதலமைச்சர் தயாராக இருக்கிறார்” என பேசினார்.